ஹட்டன் தமிழ் மகா வித்தியாலய ஆவணங்களுக்குத் தீ வைப்பு
ஹட்டன், டிக்கோயா ஹொன்சி தமிழ் மகா வித்தியாலயத்தில் மாணவர்களின் புத்தகங்கள் மற்றும் முக்கிய ஆவணங்களுக்குத் தீ வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் நோர்வூட் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
குறித்த பாடசாலையின் மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த அலுமாரிகளை உடைத்து, அவற்றுக்குள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த மாணவர்களின் புத்தகங்கள், பிறப்புச் சான்றிதழ்கள், வினாத்தாள்கள் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களுக்குத் தீ வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தச் சம்பவம் நேற்று (24) பிற்பகல் சுமார் 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
பாடசாலை மண்டபத்திலிருந்து புகை மற்றும் தீ எழுவதைக் கவனித்த அதிபர் உடனடியாகச் செயற்பட்டு தீயைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளார். இதனால் தீ மேலும் பரவுவது தடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பில் பாடசாலை அதிபர் நோர்வூட் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடையவர்களை அடையாளம் கண்டு கைது செய்வதற்காக காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.