இலங்கையில் கண்ணிவெடி அகற்றலுக்கு அமெரிக்கா 130 மில்லியன் டொலருக்கு மேல் உதவி
கடந்த 24 ஆண்டுகளில் இலங்கையில் மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளுக்காக அமெரிக்கா 130 மில்லியன் அமெரிக்க டொலருக்கு மேல் உதவி வழங்கியுள்ளதாகவும், இதன் மூலம் நாட்டின் கண்ணிவெடி அகற்றும் முயற்சிகளுக்கு மிகப்பெரிய பங்களிப்பை வழங்கும் நாடாகத் திகழ்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உதவியானது இலங்கையில் கண்ணிவெடி அச்சுறுத்தலை 90 சதவீதம் குறைக்க உதவியுள்ளது.
நேற்று சனிக்கிழமை, நடைபெற்ற கண்ணிவெடி நன்கொடையாளர்கள் மாநாட்டில் உரையாற்றும் போதே, இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் தூதுக்குழுத் துணைத் தலைவர் டேவிட் மயர்ஸ் (David Myers) இந்த விவரங்களைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், கண்ணிவெடிகள் அகற்றப்பட்டமையால் இடம்பெயர்ந்த குடும்பங்கள் தமது சொந்த இடங்களுக்குத் திரும்பவும், விவசாயிகள் தமது காணிகளில் மீண்டும் விவசாய நடவடிக்கைகளைத் தொடங்கவும், குழந்தைகள் அச்சமின்றி சுதந்திரமாக விளையாடவும் வழிவகை ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் எட்டப்பட்டுள்ள இந்த முன்னேற்றம், தெளிவான இலக்குகள், அளவிடக்கூடிய பெறுபேறுகள் மற்றும் வரையறுக்கப்பட்ட இறுதி இலக்கு ஆகியவற்றை மையமாகக் கொண்ட பயனுள்ள அமெரிக்க வெளிநாட்டு உதவி குறித்த அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மார்கோ ரூபியோவின் (Marco Rubio) தொலைநோக்கை பிரதிபலிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், எஞ்சியுள்ள கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளை நிறைவு செய்வதில் இலங்கை தலைமைப் பொறுப்பை ஏற்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை இறுதியில் கண்ணிவெடிகள் அற்ற நாடாக மாறும் சாதனையை எட்டுவது, அதன் மக்களுக்கு ஒரு முக்கிய மைல்கல்லாக அமைவதுடன், அமெரிக்க உதவி மற்றும் வலுவான உள்ளூர் பங்காளித்துவத்தின் ஊடாக எவற்றைச் சாதிக்க முடியும் என்பதையும் வெளிப்படுத்தும் என டேவிட் மயர்ஸ் கூறியுள்ளார்.
இந்த முக்கியப் பணியின் இறுதிக்கட்டத்திற்கு இலங்கை தலைமை தாங்குவதைக் காண அமெரிக்கா ஆவலுடன் எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.