நாளை அனைத்துப் பாடசாலைகளும் வழமை போன்று திறக்கப்படும் ; பிரதமர் அதிரடி அறிவிப்பு
பாடசாலை தவணை இறுதிப் பரீட்சை நேர அட்டவணையில் எவ்வித மாற்றமும் செய்யப்படாததால், அனைத்துப் பாடசாலைகளும் நாளைய தினம் (30) வழமை போன்று திறந்திருக்கும் எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
கண்டி மாவட்டச் செயலகத்தில் இன்று (29) நடைபெற்ற, 'டித்வா' புயலினால் பாதிக்கப்பட்ட மத்திய மாகாணத்தின் முன்னேற்றம் குறித்து ஆராயும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படும் வகையில் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவது நியாயமானதா என்பதைத் தமது மனசாட்சிக்கு நேர்மையாகச் சிந்தித்துப் பார்க்குமாறு பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ள ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களிடம் கேட்டுக்கொள்வதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
இதேவேளை, நேர அட்டவணையில் மாற்றமில்லை என்பதைக் கல்வி அமைச்சின் செயலாளரும் உறுதிப்படுத்தியுள்ளதாக அவர் இதன்போது வலியுறுத்தினார்.
இதன் காரணமாக, வழமை போன்று பிள்ளைகளைப் பாடசாலைகளுக்கு அனுப்புமாறு தாம் பெற்றோர்களிடம் கேட்டுக்கொள்வதாகவும், பிள்ளைகளுக்காக அர்ப்பணிப்புடன் செயற்படும் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் நாளை (30) பணிக்குச் சமூகமளிப்பார்கள் எனத் தாம் நம்புவதாகவும் ஹரிணி அமரசூரிய குறிப்பிட்டார்.