தமிழ் மாணவனை பலியெடுத்த விபத்து ; வேன் சாரதி செய்த மோசடி
கம்பளை – நுவரெலியா பிரதான வீதியின் மஹார பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 15 வயதுடைய பாடசாலை மாணவன் உயிரிழந்துள்ளதுடன், மேலும் மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவர் புஸ்சல்லாவ, சங்குவாரி தோட்டத்தைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணை
குறித்த மாணவன் வெள்ளிக்கிழமை இரவு கம்பளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த தனது சித்தப்பாவைப் பார்வையிட்டு, அத்தை மற்றும் உறவினருடன் வாடகை முச்சக்கர வண்டியில் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது, இரவு 7.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
தாயின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட பின்னர் மதுபோதையில் வேனை செலுத்தி வந்த சாரதி, வேகக் கட்டுப்பாட்டை இழந்து முச்சக்கர வண்டியுடன் மோதியுள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
விபத்துடன் தொடர்புடைய வேன் மற்றும் முச்சக்கர வண்டியின் சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதுபோதையில் இருந்த வேன் சாரதி மருத்துவப் பரிசோதனையின்போது சிறுநீர் மாதிரிக்குப் பதிலாக தண்ணீரை வழங்கியதாகவும், வைத்தியரின் எச்சரிக்கையைத் தொடர்ந்து மீண்டும் சிறுநீர் மாதிரியை வழங்க நேரிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கம்பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.