அமெரிக்காவின் புலனாய்வு குழு இலங்கைக்கு ; தூதரகத்தின் விளக்கம்!
இலங்கைத் திறைசேரி நிதியிலிருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் சட்டவிரோதமாகப் பரிமாற்றம் செய்யப்பட்ட சைபர் மோசடி விவகாரம் தொடர்பில், விசாரணைக்காக, அமெரிக்காவின் மத்திய புலனாய்வுப் பிரிவின் (FBI) குழுவொன்று இலங்கைக்கு வந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்களில் வெளியான செய்திகளை கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் முற்றிலுமாக மறுத்துள்ளது.
இதுபோன்ற எந்தவொரு குழுவும் இலங்கைக்கு அனுப்பப்படவில்லை என அமெரிக்க தூதரகத்தின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

பல நாடுகளில் உள்ள பொதுவான நடைமுறையைப் போன்றே, இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகத்திலும் எப்.பி.ஐ சட்ட இணைப்பாளர் ஒருவர் பணியில் இருப்பதாக ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த உத்தியோகபூர்வ பதவியில் உள்ளவர், உள்ளூர் அதிகாரிகளினால் கோரிக்கை விடுக்கப்படும் பட்சத்தில், இரு நாடுகளுக்கும் இடையிலான சட்ட அமுலாக்க ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை மட்டுமே மேற்கொள்வார் என தூதரகம் விளக்கமளித்துள்ளது.
இந்தநிலையில், குறிப்பாக பாதுகாப்பு மற்றும் புலனாய்வு போன்ற விவகாரங்களில் செய்திகளின் துல்லியம் மிகவும் முக்கியமானது என்பதை அமெரிக்க தூதரக அதிகாரி வலியுறுத்தியுள்ளார்.