இலங்கை கடற்பரப்பில் தத்தளித்த இந்திய கடற்றொழிலாளர்: இலங்கையர்களால் காப்பாற்றப்பட்டார்!
தற்போது நிலவும் கடும் காற்று காரணமாக கடலில் திசைமாறி வந்து, நெடுந்தீவுக் கடற்பரப்பில் தத்தளித்துக் கொண்டிருந்த தமிழக கடற்றொழிலாளர் ஒருவரை, யாழ்ப்பாணம் - நெடுந்தீவு கடற்றொழிலாளர்களால் பாதுகாப்பாக மீட்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தின் இராமேஸ்வரம், இராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய கடற்றொழிலாளர் ஒருவரே இவ்வாறு இலங்கை கடற்பரப்பில் வைத்து மீட்கப்பட்டுள்ளார்.

நேற்று மாலை 4.30 மணியளவில் நெடுந்தீவு கடற்றொழிலாளர்களால் மீட்கப்பட்ட குறித்த கடற்றொழிலாளர் தம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக நெடுந்தீவு காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இது தொடர்பான விசாரணைகளின் பின்னர், இன்றையதினம், குறித்த தமிழக கடற்றொழிலாளரை ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக நெடுந்தீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.