ரயில் பாதைகளில் காட்டு யானை விபத்துக்களை தடுக்க அவசர நடவடிக்கை
காட்டு யானைகள் ரயில்களில் மோதுவதால் ஏற்படும் விபத்துகளைத் தடுக்க அவசர நடவடிக்கைகள் எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கல்ஓயாவிற்கும் ஹிங்குரக்கொடைக்கும் இடையிலான 141வது மைல்கல்லுக்கு அருகில் ரயிலில் மோதி ஆறு காட்டு யானைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக நேற்று (20) பாராளுமன்ற வளாகத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றுள்ளது.
அவசர நடவடிக்கைகள்
போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க மற்றும் சுற்றாடல் அமைச்சர் தம்மிக்க படபெந்தி ஆகியோரின் தலைமையில் இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.
போக்குவரத்து, சுற்றுச்சூழல், டிஜிட்டல் அமைச்சகங்கள், ரயில்வே மற்றும் வனவிலங்கு திணைக்களம் மற்றும் குறித்த நிறுவனங்களின் உயரதிகாரிகள், பல்வேறு சுற்றுச்சூழல் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு அமைப்புகள் இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டிருந்தன.
காட்டு யானை விபத்துக்கள் அதிகமாக நடைபெறும் பகுதியில் ரயில் தண்டவாளங்களை மேலும் தெரியும்படி செய்வதிலும், டிஜிட்டல் தொழில்நுட்பம் உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதிலும் அதிக கவனம் செலுத்தப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
தொடருந்தின் முன்னும் பின்னும் விளக்கு அமைப்புகளை நிறுவுவது, மஞ்சள் விளக்குகளுக்குப் பதிலாக வெள்ளை விளக்குகளைப் பயன்படுத்துவது குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
மேலும், கலந்துரையாடலின் இரண்டாம் கட்டமாக, அனைத்து தரப்பினரும் நாளை (22) விபத்து நடந்த இடத்திற்குச் சென்று விரிவான ஆய்வு நடத்தி, குறித்த தீர்மானங்கள் மற்றும் செயல்படுத்த வேண்டிய வேறு ஏதேனும் தீர்மானங்கள் இருந்தால் அவற்றையும் செயற்படுத்த திட்டமிட்டுள்ளனர்.