இலங்கைக்கு குடும்பத்துடன் சுற்றுலா வந்த உக்ரைன் யுவதிக்கு நேர்ந்த நிலை!
இலங்கைக்கு குடும்பத்துடன் சுற்றுலா வந்த உக்ரைனை சேர்ந்த இளம் பெண்ணொருவர் சுரங்கத்தில் மோதி விபத்துக்குள்ளாகி படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை நோக்கிச் சென்ற உடரட்ட மெனிகே ரயிலில் பயணித்த யுவதியே ரயில் பாதையில் உள்ள சுரங்கத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார்.
இந்த சம்பவம் நேற்றையதினம் (15-06-2024) இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்தில் 23 வயதுடைய பிலோஸ் அனஸ்தாசியா என்ற உக்ரைன் யுவதியே காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இலங்கைக்கு குடும்பத்துடன் சுற்றுலா வந்திருந்த இவர் குடும்பத்தாருடன் எல்ல பகுதிக்கு ரயிலில் பயணித்துக்கொண்டிருந்தபோது, ஒஹியா மற்றும் பட்டிபொல ரயில் நிலையங்களுக்கு இடையில் அமைந்துள்ள சுரங்க பாதையில் மோதி விபத்துக்குள்ளாகி காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்த யுவதி அந்த ரயிலில் ஹப்புத்தளை ரயில் நிலையத்துக்கு கொண்டுசெல்லப்பட்டு, அங்கிருந்து தியத்தலாவை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் மேலதிக சிகிச்சைக்காக பதுளை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, அங்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.