என்னை உயிரோடு பார்ப்பது இதுவே கடைசியாக இருக்கலாம்! உக்ரைன் அதிபர் உருக்கம்
இது தான் நீங்கள் என்னை உயிரோடு பார்க்கும் கடைசி முறையாக இருக்குமென உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி (Volodymyr Zelenskyy) தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யப் படைகள் 2-வது நாளாக உக்கிரமான தாக்குதலை நடத்தி வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷ்யப் படைகள் தாக்கி அழித்துள்ளன.

அதேபோல் உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்ள, ரஷ்யப் படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகின்றது. உக்ரைன் தலைநகர் கீவ்- நகரையும் நெருங்கியுள்ள ரஷ்யப் படைகள் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன.
இதற்கிடையில், உக்ரைன் நாட்டின் ஆட்சி அதிகாரத்தை கையில் எடுக்குமாறு அந்நாட்டு ராணுவத்தினருக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் (Vladimir Putin) அழைப்பு விடுத்துள்ளார்.

உக்ரைன் இராணுவம் அதிகாரத்தை கைப்பற்றும் நிலையில், பேச்சுவார்த்தை மூலம் எளிய தீர்வு எட்ட முடியும். உக்ரைனில் தற்போதுள்ள ஆட்சியை அகற்றிவிட்டு ராணுவ ஆட்சியை கொண்டு வரவேண்டும்” என விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஐரோப்பிய யூனியன் தலைவர்களுடன் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி காணொளி காட்சி மூலம் இன்று (25-02-2022) பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பேசிய ஜெலன்ஸ்கி, நீங்கள் என்னை உயிரோடு பார்ப்பது இது தான் கடைசி முறையாக இருக்கும்’ என்றார்.