ஓடும் பஸ்ஸில் அவசரமாக டிரஸ் மாற்றிய 2 பெண்கள் ; நடத்துநரின் சந்தேகத்தால் அம்பலமான மர்மம்
இந்தியாவின் கேரள மாநிலத்தில், ஓடும் தனியார் பஸ்ஸுக்குள் அவசர அவசரமாக ஆடைகளை மாற்றிய இரண்டு பெண்கள், பஸ் சாரதி மற்றும் நடத்துநருக்கு ஏற்பட்ட சந்தேகத்தைத் தொடர்ந்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல கால யாத்திரை ஆரம்பமாகியுள்ள நிலையில், கேரளாவின் பல்வேறு பகுதிகளிலும் பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. குறிப்பாக, எருமேலி உள்ளிட்ட யாத்திரை வழித்தடங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகின்றது.
இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி பக்தர்களிடம் பணம் மற்றும் நகைகளைத் திருட சிலர் திட்டமிட்டுள்ளதாகப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இந்நிலையில், கோழஞ்சேரியிலிருந்து ரான்னிக்குச் சென்ற தனியார் பஸ்ஸில் பயணித்த இரண்டு பெண்களின் நடவடிக்கை பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த பெண்கள் தாங்கள் இறங்க வேண்டிய இடம் வந்ததும், பஸ்ஸுக்குள்ளேயே அவசர அவசரமாகத் தங்களது ஆடைகளை மாற்றியுள்ளனர். இதனை அவதானித்த பஸ் சாரதி மற்றும் நடத்துநர், அவர்களின் நடவடிக்கையில் சந்தேகமடைந்துள்ளனர்.
இதையடுத்து, உடனடியாக ரான்னி பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளனர். தகவலின் அடிப்படையில் விரைந்து செயற்பட்ட பொலிஸார், பொலிஸ் நிலையத்திற்கு அருகில் குறித்த பஸ்ஸை நிறுத்தி, இரண்டு பெண்களையும் விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.
பொலிஸாரின் விசாரணைகளின்போது, இருவரும் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை வழங்கியதால் சந்தேகம் மேலும் வலுத்துள்ளது. இதையடுத்து, பெண் பொலிஸார் மேற்கொண்ட சோதனையில், ஒரு பெண் தனது ஆடைக்குள் மறைத்து வைத்திருந்த 21,000 இந்திய ரூபாய் பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பணத்தின் உரிமை தொடர்பாகப் பொலிஸார் விசாரணை நடத்தியபோது, இருவரும் உரிய விளக்கமளிக்க முடியாமல் தடுமாறியுள்ளனர். தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில், குறித்த பெண்கள் கோயம்புத்தூர் மாவட்டம் கொழிஞ்சாம்பாறையைச் சேர்ந்த பார்வதி மற்றும் தூத்துக்குடி அண்ணாநகரைச் சேர்ந்த கீதா என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலும், பார்வதி, கீதா என்ற பெயர்களுக்கு மேலதிகமாக பவானி, அனு, லட்சுமி உள்ளிட்ட பல்வேறு பெயர்களிலும் இவர்கள் செயற்பட்டு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இவர்களுக்கு எதிராக ஏற்கெனவே பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளமையும் பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சபரிமலை யாத்திரைக் காலத்தில் அதிகரித்துள்ள பக்தர்கள் கூட்டத்தைப் பயன்படுத்தி திருட்டுச் சம்பவங்களில் ஈடுபடுவதற்காகவே இவர்கள் வந்திருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
பஸ் சாரதி மற்றும் நடத்துநர் வழங்கிய தகவலின் அடிப்படையில் இருவரையும் கைது செய்த ரான்னி பொலிஸார், அவர்கள் இதுவரை எந்தெந்தப் பகுதிகளில் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர் என்பது தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.