வரதட்சணையாக கேட்ட சிற்றுந்து கிடைக்கவில்லை ; திருமணத்தையே நிறுத்திய காவல்துறை அதிகாரி
இந்தியாவின் ஹரியானா மாநிலம் சோனிபட் மாவட்டத்தில், வரதட்சணையாகக் கேட்ட சிற்றூந்தை வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக மணமகன் ஒருவர் திருமணத்தை நிறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த இளம்பெண்ணுக்கும், காவல்துறை அதிகாரியாகப் பணியாற்றும் இளைஞர் ஒருவருக்கும் ஆறு மாதங்களுக்கு முன்னர் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.
திருமணத்திற்காக 13 இலட்சம் ரூபாய் மதிப்பிலான சிற்றூந்து ஒன்றை மணமகன் கோரிய நிலையில், மணமகளின் தந்தை சுமார் 9.5 இலட்சம் ரூபாய் மதிப்பிலான சிற்றூந்தை முதலில் பதிவு செய்துள்ளார்.

பின்னர் மணமகனின் விருப்பத்திற்கமைய அதிக விலையுள்ள சிற்றூந்தை பதிவு செய்துள்ளார்.
எனினும், குறித்த சிற்றூந்து திருமண நாளான நவம்பர் 20ஆம் திகதியன்று கிடைக்காததால் ஆத்திரமடைந்த மணமகன், சிற்றூந்து கிடைத்தால் மட்டுமே திருமணம் செய்துகொள்வதாகக் கூறி திருமணத்தை நிறுத்திவிட்டுத் தனது வீட்டிற்குச் சென்றுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த மணமகளின் குடும்பத்தினர், மணமகன் மீது காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
திருமணத்திற்காக நகைகள் உள்ளிட்ட வரதட்சணைப் பொருட்களையும் வழங்கியதுடன், சுமார் 30 இலட்சம் ரூபாய் வரை செலவிட்டதாகவும், இந்தச் சம்பவத்தால் தனது மகள் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளதாகவும் மணமகளின் தந்தை தெரிவித்துள்ளார்.
அத்துடன், காவல்துறை அதிகாரியாக இருக்கும் மணமகன் தொடர்பில் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.