வேலை தேடி வந்த பெண்களுக்கு நேர்ந்த கொடூரம் ; கூட்டுப் பாலியல் வன்புணர்வு இரண்டு சகோதரிகள் கைது
இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் இரண்டு சகோதரிகள் இணைந்து நடத்தி வந்த பாரிய பாலியல் மற்றும் மதமாற்ற மோசடி குழு ஒன்று காவல்துறையினரால் முறியடிக்கப்பட்டுள்ளது.
சத்தீஸ்கரைச் சேர்ந்த 21 வயதுடைய அழகுக்கலை நிபுணர் மற்றும் போபாலைச் சேர்ந்த 30 வயதுடைய பெண் ஆகிய இருவரும் வழங்கிய முறைப்பாடுகளின் அடிப்படையில் குறித்த சம்பவம் அம்பலமாகியதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மேலதிக விசாரணை
குறித்த இருவரும் வேலை வாய்ப்பு தருவதாகக் கூறி அழைத்துச் செல்லப்பட்டு, போதைப்பொருள் வழங்கப்பட்டு கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த மோசடி குழுவை இரண்டு சகோதரிகள் முன்னின்று நடத்தியதாகவும், இவர்கள் போபாலில் உள்ள சொகுசு குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக இரு சகோதரிகளும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இவர்களுடன் தொடர்பிலிருந்த மேலும் மூவர் தலைமறைவாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேகநபர்கள் இருவரும், பாதிக்கப்பட்ட பெண்களை வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்ய திட்டமிட்டதாகவும் அத்துடன், அவர்களை மதுபான சாலைகளுக்கு (Pubs) அழைத்துச் சென்று செல்வந்தர்களுடன் பழகக் கட்டாயப்படுத்தியதாகவும் பாதிக்கப்பட்ட பெண்கள் குறித்த முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தக் குழுவினர் குறிப்பாக ஏழ்மையான நிலையில் உள்ள பெண்களை இலக்கு வைத்து இவ்வாறான சட்ட விரோத செயலில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சந்தேகநபர்கள் இருவர் மீதும் பாலியல் வன்புணர்வு, குற்றச் சதி மற்றும் மத சுதந்திரச் சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.