கடற்படையினரின் சுற்றிவளைப்பில் சிக்கிய இருவர் ; உடைமையிலிருந்த பொருளால் அதிர்ச்சி
சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைக்காக 'டைனமைட்' வெடி பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் இரு மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடற்படையினரின் சுற்றிவளைப்பின் போது, குறித்த இரு மீனவர்களும் மன்னார் தாழ்வுபாடு கடற்கரை பகுதியில் வைத்து இன்று (19) கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணை
அவர்களிடம் மூன்று தொகுதி டைனமைட் வெடிபொருள் மீட்கப்பட்ட நிலையில் மேலதிக விசாரணைகளின் பின்னர் இரு சந்தேக நபர்களையும் மன்னார் கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரியிடம் மேலதிக விசாரணைக்காக கடற்படையினர் ஒப்படைத்தனர்.
இதனை தொடர்ந்து மேலதிக விசாரணையின் பின்னர் இன்று மதியம் குறித்த இரு சந்தேக நபர்களையும் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில் விசாரணைகளை மேற்கொண்ட நீதவான் இரு மீனவர்களையும் எதிர்வரும் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
அதேநேரம் கைப்பற்றப்பட்ட 'டைனமைட்' வெடி பொருட்களை அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்பி வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.