NPP எம்.பியை தாக்கிய பொலிஸ் அதிகாரி குறித்து வெளியான முக்கிய தகவல்
இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பத்மகுமாரவுடன் ஏற்பட்ட முரண்பாட்டினால் பணி இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த பொலிஸ் அதிகாரி வசந்த ஹெட்டியாராச்சிக்கு மீண்டும் பணி வழங்க பொலிஸ் தலைமையகம் தீர்மானித்துள்ளது.
தனது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகக் கூறி அந்த அதிகாரி இரத்தினபுரி மனித உரிமைகள் ஆணைக்குழுவில் தாக்கல் செய்திருந்த முறைப்பாட்டைத் தொடர்ந்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மருத்துவப் பரிசோதனை அறிக்கை
குறித்த முறைப்பாடு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, இரத்தினபுரி பிரதி பொலிஸ் மா அதிபர் முன்னிலையில், அந்த அதிகாரியின் பணி இடைநீக்கத்தை நீக்க காவல்துறையினர் இணக்கம் தெரிவித்தனர்.
மருத்துவப் பரிசோதனை அறிக்கை கிடைத்தவுடன் தனக்கு மீண்டும் பணி வழங்கப்படும் என பொலிஸார் உறுதியளித்ததாக பாதிக்கப்பட்ட அதிகாரி ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
தான் தன்னிச்சையாகக் கைது செய்யப்பட்டமை தொடர்பில் விசாரணை நடத்துமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பான அடிப்படை உரிமைகள் வழக்கு தனியாகத் தொடரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நியாயமான முறையில் கடமையைச் செய்ய முற்பட்ட போது தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நியாயம் கிடைக்க வழிசெய்த அனைத்து தரப்பினருக்கும் அவர் தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.