ஹோட்டல் ஒன்றில் ஏற்பட்ட பாரிய தீ விபத்து... 66 பேர் உயிரிழப்பு! 50க்கும் மேற்பட்டோர் காயம்
துருக்கியில் மலைப்பகுதியில் உள்ள பிரபல ஹோட்டலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 66 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தீ விபத்து சம்பவம் போலு மலைப்பகுதியில் ஸ்கை ரிசார்ட் ஹோட்டலில் இன்றையதினம் (21-01-2025) அதிகாலை ஏற்பட்டுள்ளது.
தீ விபத்தில் சிக்கியதால் அச்சத்தில் பலர் உயிர் பிழைப்பதற்காக ஜன்னல்கள் வழியாக மேலிருந்து கீழே குதித்துள்ளனர். இதனால் பலர் படுகாயமடைந்துள்ளனர்.
தீ விபத்து நடந்த ஹோட்டல் வடமேற்கு துருக்கியில் உள்ள கர்தல்காயா ஸ்கை ரிசார்ட்டில் உள்ளது.
11 மாடிகளைக் கொண்ட கிராண்ட் கார்டால் ஹோட்டலின் உணவகத் தளத்தில் துருக்கி நேரப்படி அதிகாலை 3:30 மணியளவில் தீப்பிடித்தாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஹோட்டலில் சுமார் 234 பேர் தங்கியிருந்ததாக போலு மாகாண ஆளுநர் அப்துல்அஜிஸ் அய்டின் கூறியுள்ளார்.
பாதிக்கப்பட்டவர்களில் இருவர் பீதியில் கட்டிடத்திலிருந்து கீழே குதித்து இறந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சர் கெமல் மெமிசோக்லு இந்த விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கையை உறுதிப்படுத்தினார்.
குறைந்தது 51 பேர் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
கீழே குதித்த பலருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன. மேலும் சிலர் கடுமையான தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.