திருகோணமலை மாநகர சபையில் தமிழரசுக் கட்சி உறுப்பினரால் சலசலப்பு
திருகோணமலை மாநகர சபையின் 2026ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் இன்று (23) சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
மாநகர சபை முதல்வர் க.செல்வராஜா தலைமையில், மாநகர ஆணையாளர் உ. சிவராசா மற்றும் செயலாளர் ஆகியோரின் முன்னிலையில் இன்று(23) காலை சபை நடவடிக்கைகள் ஆரம்பமாகின.

வரவு- செலவு திட்டம் நிறைவேற்றம்
இதன்போது, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் அஜித்குமார் பாதீட்டை முன்மொழிய, மற்றொரு உறுப்பினர் குமாரகுலசிங்கம் அதனை வழிமொழிந்தார். இதனைத் தொடர்ந்து சபையில் இருந்த அனைத்து உறுப்பினர்களினாலும் இப்பாதீடு ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
25 உறுப்பினர்களைக் கொண்ட திருகோணமலை மாநகரசபையில் இன்றைய அமர்வில் 20 உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
தமிழரசுக் கட்சி, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் சுயேச்சைக்குழு ஆகியவற்றைச் சேர்ந்த 5 உறுப்பினர்கள் சுகவீனம் மற்றும் தனிப்பட்ட காரணங்களினால் சமூகமளிக்கவில்லை.
சபை நடவடிக்கைகள் நிறைவடைந்த பின்னர், சுயேச்சைக்குழு உறுப்பினர் ஒருவரும் தமிழரசுக் கட்சி உறுப்பினர் ஒருவரும் தாமதமாக வருகை தந்திருந்தனர்.
இதன்போது, தாமதத்திற்கான காரணம் குறித்து ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பிய போது, "எனக்கு நேரம் கிடைக்கின்ற போதுதானே வரலாம்" என தமிழரசுக் கட்சி உறுப்பினர் பதிலளித்தமை அங்கு சற்று சலசலப்பை ஏற்படுத்தியது.