காட்டில் சட்டவிரோதமாக இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை!
திருகோணமலை - சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லிங்கபுரம் காட்டுப் பகுதியில் மறைமுகமாக இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையத்தை பொலிஸார் இன்றைய தினம் (14-07-2023) முற்றுகையிட்டுள்ளனர்.
இதன்போது, பெரும் தொகை கசிப்பும், சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சுற்றுவளைப்பு நடவடிக்கை, சேருநுவர பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி.ஜி.சி.கே.நாகந்தல தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேற்கொண்டனர்.
இதன்போது கசிப்பு 144 போத்தல்கள், கசிப்பு காய்ச்ச பயன்படுத்தப்படும் கோடா 259,500 மில்லி லீற்றர் என்பனவும் வயர், பரல், கேன் உள்ளிட்டவைகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்களான இருவர்களும் 43,30 வயதுடையவர்களாவார்.
சந்தேக நபர்கள் இருவரும் சேருநுவர பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களை நாளை மூதூர் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்கான ஏற்பாடுகளை சேருநுவர பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.