பிரபல போதைப்பொருள் வர்த்தகரின் பிறந்தநாளை முன்னிட்டு விருந்துபசாரம் ; புலனாய்வுப் பிரிவால் ஒளிப்பதிவு
வெளிநாட்டில் வசிக்கும் பிரபல போதைப்பொருள் வர்த்தகரான வனாத்தே பறை சுதா என்பவர், தமது பிறந்தநாளை முன்னிட்டு கோட்டேயில் உள்ள சொகுசு விருந்தகமொன்றில் இருநூறுக்கும் மேற்பட்ட தமது ஆதரவாளர்களுக்கு விருந்தளித்துள்ளதாக புலனாய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விருந்துபசாரத்துக்கு சுமார் ஒரு கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாகவும் இந்த விருந்துபசாரம் போதைப்பொருள் வர்த்தகரின் நிதி பங்களிப்பில் நடத்தப்படும் ஒரு அறக்கட்டளையின் கூட்டமாக ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
கொழும்பு நகரத்தின் பல்வேறு சேரிக் குடியிருப்பு பகுதிகளை சேர்ந்தவர்கள் ஒரே மாதிரியான ஆடைகளை அணிந்து இந்த விருந்துபசாரத்துக்கு வந்துள்ளனர். பெண்களுக்கு முன்கூட்டியே புடவைகள் வழங்கப்பட்டதாகவும், ஆண்களுக்கு டி-சர்ட்கள் வழங்கப்பட்டதாகவும் புலனாய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விருந்துபசாரம் கடந்த வார இறுதியில் இரவு நேரத்தில் நடைபெற்றுள்ளது. போதைப்பொருள் மூலம் உழைத்த கறுப்புப் பணத்தை வெள்ளையாக்க இந்த அறக்கட்டளை அமைக்கப்பட்டுள்ளதாகவும், அதன் பின்னணியில் உள்ள வலையமைப்பை தற்போது புலனாய்வு வட்டாரங்கள் அடையாளம் கண்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
'பறை சுதா'வெளிநாட்டிலிருந்து காணொளி அழைப்பு மூலம் நேரடியாக இந்த விருந்துபசாரத்தில் இணைக்கப்பட்டதாகவும் புலனாய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன.
பறை சுதா போதைப்பொருள் மூலம் ஈட்டிய பணத்தை பயன்படுத்தி கடந்த பொசன் பூரணை தினத்தில் பொரளையில், தலா 15 ஆயிரம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் அடங்கிய பைகள் ஆயிரம் பேருக்கு விநியோகித்துள்ளார்.
இந்தப் பொருட்கள் அடங்கிய பைகள் ஒரு சிறப்பங்காடியிலிருந்து பெறப்பட்டு இரண்டு நாட்களில் பாரவூர்திகள் மற்றும் கொள்கலன்களில் விநியோகிக்கப்பட்டன. அந்தப் பைகளில் தலா 10 கிலோகிராம் அரிசி மற்றும் 10 முட்டைகள் அடங்கிய ஒரு பையும் இருந்துள்ளன.
அதேநேரம், 2000 உணவுப் பொதிகள் ஒரே நேரத்தில் விநியோகிக்கப்பட்டதாகவும் உளவுத்துறை தகவல்கள் தெரிவித்தன. இந்த விருந்துபசாரத்தை பாதுகாப்பு புலனாய்வுப் பிரிவினர் ஒளிப்பதிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.