வரி விலக்குகள் காரணமாக திறைசேரிக்கு டிரில்லியன்களில் நட்டமா?
வரி விலக்குகள் காரணமாக திறைசேரிக்கு 2 டிரில்லியன் ரூபாய்கள் நட்டம் ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
இலங்கையின் முக்கிய வருமான நிறுவனங்களான உள்நாட்டு வருமான வரி திணைக்களம், சுங்கம் மற்றும் மதுவரித் திணைக்களம் என்பன வருடத்தின் முதல் அரையாண்டில் 1,680.2 பில்லியன் ரூபாய்களை வசூலித்துள்ளன.
இது எதிர்பார்த்த வருவாயில் 44 சதவீதத்தை ஈடு செய்துள்ளது.
இருப்பினும், மொத்தம் 978 பில்லியன் ரூபாய் வரி விலக்குகள் காரணமாக திறைசேரிக்கு இந்த நட்டம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, வரிகளை வசூலிக்கும் முயற்சியில் வரி செலுத்தாதவர்களின் வங்கிக் கணக்குகளை முடக்குவதற்கு உள்நாட்டு வருமான வரித்திணைக்களம், சுமார் 900 அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
இதற்கிடையில், 18 வயதுக்கு மேற்பட்ட தகுதியுள்ள வரி செலுத்துவோர் சுமார் 13 மில்லியன் பேர் இருந்தாலும், 5 மில்லியன் பேருக்கு மட்டுமே வரி அடையாள எண்கள் வழங்கப்பட்டுள்ளன
மீதமுள்ள தகுதியுள்ளவர்களுக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் அடையாள எண்களை வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.