புதையல் வேட்டையில் சிக்கிய பொலிஸ் அதிகாரியின் மனைவி; விசாரணையில் அம்பலமாகும் தகவல்கள்
அனுராதபுரம் - ஸ்ராவஸ்திபுர, திபிரிகடவல பகுதியில் உள்ள விகாரைக்கு அருகில், புதையல் தோண்டியமை தொடர்பாக ,பிரதி பொலிஸ் மாஅதிபரின் மனைவி கைது செய்யப்படுவதற்கு முன்னர், பிரதி பொலிஸ் மா அதிபர் புதையல் தோண்டப்பட்டதாகக் கூறப்படும் இடத்திற்கு சென்றமைக்கான ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகக் குற்றப் புலனாய்வு துறை தெரிவித்துள்ளது.
குறித்த ஆதாரங்களை உறுதிப்படுத்த தற்போது பாதுகாப்பு கேமரா ஆய்வு நடத்தப்பட்டு வருவதாகக் குற்றப் புலனாய்வு துறையினர் தெரிவிக்கின்றனர்.
தொலைபேசி ஆய்வுகள்
மேலும், குறித்த விசாரணைகளின் போது சாட்சிகள் பாதிக்கப்படாமல் இருக்க சந்தேகநபரின் கணவரான பிரதி காவல்துறை மாஅதிபரை கொழும்பிலிருந்து வேறு இடத்திற்கு மாற்றம் செய்யுமாறு குற்றப் புலனாய்வு பிரிவினர் பொலிஸ் மாஅதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பிரதி பொலிஸ் மாஅதிபரின் மனைவி உட்பட 8 பேர் கைது செய்யப்பட்ட போது, பிரதி பொலிஸ் மாஅதிபர் அநுராதபுரத்திலிருந்தார் எனவும், புதையல் தோண்டப்பட்ட விடயம் ஏலவே அவருக்குத் தெரிந்திருந்தது எனவும் குற்றப் புலனாய்வு துறையினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், இவ்விடயம் தொடர்பில் பிரதி பொலிஸ் மாஅதிபரின் சாரதியிடம் இருந்து சில முக்கிய உண்மைகள் வெளிவரும் எனவும் எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் பிரதி பொலிஸ் மாஅதிபரின் மனைவிக்கும், புதையல் தோண்டப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஏனைய நபர்களுக்கும் இடையிலான தொடர்புகள் குறித்து தொலைபேசி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.