வெளிநாட்டு பிரஜையிடம் இலங்கை பொலிஸார் செய்த முகம் சுழிக்கும் செயல்
சிங்கப்பூர் பிரஜையொருவரிடமிருந்து இரண்டு இ-சிகரெட்டுகளை பறிமுதல் செய்து, சட்டத்தை அமுல்படுத்துவதை தவிர்ப்பதாகக் கூறி, அவரிடமிருந்து பணத்தைப் பறித்த மூன்று பொலிஸ் அதிகாரிகளில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பம்பலப்பிட்டி காவல்துறை தெரிவித்துள்ளது.
குறித்த பிரஜையிடம், 40,000 ரூபாய் பணத்தைக் கோரி, 30,000 ரூபா பணத்தை பறிமுதல் செய்த குற்றச்சாட்டிலேயே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணை
பம்பலப்பிட்டி பொலிஸில் பணியாற்றும் காவல்துறை சார்ஜென்ட் மற்றும் ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள் சாரதி ஆகிய இருவருமே கைது செய்யப்பட்டுள்ளனர்.
முறைப்பாடு செய்துள்ள சிங்கப்பூர் பிரஜை, வாடகை வண்டியில் பயணம் செய்த போது, பொலிஸ் அதிகாரிகள் வாடகை வண்டியை நிறுத்தி, சிங்கப்பூர் நாட்டவரின் பொதிகளைச் சோதனை செய்து 2 சிகரெட்டுகளையும் கண்டுபிடித்ததாக பொலிஸ் தெரிவித்துள்ளது.
அந்த நேரத்தில், பொலிஸ் அதிகாரிகள் சிங்கப்பூர் நாட்டவரைத் தொடர்பு கொண்டு, இதை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தால், அவர் ரூ.50,000 அபராதம் செலுத்த வேண்டியிருக்கும் என்று கூறி, அவரிடமிருந்து 40,000 பணத்தைக் கேட்டு அதிலிருந்து 30,000 ரூபாவை பறித்தமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் பம்பலப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.