விடுதியில் தங்கியிருந்தவர்களால் நடத்தபடவிருந்த சம்பவம் அம்பலம் ; காட்டிக்கொடுத்த இரகசிய தகவல்
கண்டி - பன்வில பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹுலுகங்கை பகுதியில் நகை கடை ஒன்றில் கொள்ளையிடும் நோக்கில், அப்பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்த மூன்று பேர் கொண்ட கொள்ளைக் கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது.
சந்தேகநபர்களிடமிருந்து போதைப்பொருள், கறுப்பு நிற முகமூடிகள், பிளாஸ்டிக் கைவிலங்குகள், சுத்தியல்கள், குறடு, விளையாட்டுத் துப்பாக்கிகள் மற்றும் மெகசின்கள் ஆகியவற்றை பன்வில பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினர் கைப்பற்றியுள்ளனர்.

இரகசிய தகவல்
பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இந்தக் கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது.
கைதானவர்கள் ரக்வானை, டிக்கோயா மற்றும் பலாங்கொடை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 40 -45 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் நாட்டின் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் என்பதும், இவர்களுக்கு எதிராக நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளதோடு, பல பிடியாணை உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளமை முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.