திருகோணமலையில் மாயமான மூன்று பேர் ; அச்சமடைய வேண்டாம், பிரதி அமைச்சர் வெளியிட்ட தகவல்
திருகோணமலை மாவட்டத்தில் கடந்த சில தினங்களில் பதிவான மூன்று வெவ்வேறு நபர் காணாமல் போன சம்பவங்கள் குறித்து பொலிஸார் துரித விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும், இது குறித்து பொதுமக்கள் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் வெளிவிவகாரம் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் பிரதி அமைச்சரும், மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவித்த அவர்,

விசேட விசாரணை
கடந்த திங்கட்கிழமை (26) முதல் திருகோணமலையில் மூன்று வெவ்வேறு சம்பவங்கள் பதிவாகியிருந்தன: மாவட்ட பொது வைத்தியசாலை முச்சக்கர வண்டித் தரிப்பிடத்திலிருந்து காணாமல் போயிருந்த சாரதி, இன்று படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நீதிமன்ற வீதியைச் சேர்ந்த 17 வயதுடைய எம்.எல்.எம்.எம். முன்சித் எனும் மாணவர் நேற்று காலை முதல் காணாமல் போனதுடன் மீட்கப்பட்டார்.
திருகோணமலை கடற்படைத் தளத்தில் கடமையாற்றும் மட்டக்களப்பைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் விடுமுறையில் சென்ற நிலையில் காணாமல் போயுள்ளார்.
இந்தச் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸ் உயர்மட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா பின்வருமாறு குறிப்பிட்டார், இந்த மூன்று சம்பவங்கள் தொடர்பாகவும் பொலிஸார் தனித்தனியாக விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
விசாரணைகளில் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதுடன், பல முக்கிய தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன. குற்றவாளிகள் அல்லது பின்னணிக் காரணிகள் குறித்து பொலிஸார் ஏற்கனவே சில அடையாளங்களைக் கண்டுள்ளனர்.
மேலும், பொதுமக்களிடையே பரவி வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் எனக் கேட்டுக்கொண்ட அவர், சட்டமும் ஒழுங்கும் நிலைநாட்டப்படுவதை அரசாங்கம் உறுதிப்படுத்தும் என்றும், இச்சம்பவங்களுக்குப் பின்னால் உள்ள உண்மைகள் விரைவில் வெளிக்கொண்டு வரப்படும் என்றும் உறுதியளித்தார்.
பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நீதி கிடைக்கவும், மாயமான ஏனைய இருவரையும் பாதுகாப்பாக மீட்கவும் சகல பாதுகாப்புப் பிரிவினரும் ஒருங்கிணைந்து செயற்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.