கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா ; யாழ் அரசாங்க அதிபர் அலுவலகத்தில் கூடிய முக்கியஸ்தர்கள்
வரலாற்றுச் சிறப்புமிக்க கச்சதீவு புனித அந்தோனியார் திருத்தலத்தின் 2026 ஆம் ஆண்டுக்கான வருடாந்தத் திருவிழா தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில், நேற்று (27) மு. ப. 11.00 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதன்போது எதிர்வரும் பெப்ரவரி மாதம் 27 மற்றும் 28ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ள வருடாந்த விழாவை சிறப்பாக நடத்துவதற்காக, அதற்கான நிதி விடயங்கள் தொடர்பான முன்னாயத்த நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயும் நோக்கில் குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது.

நிதி ஒதுக்கீடுகள்
இந்த கலந்துரையாடலின் போது, விழாவுக்கான செலவீன திட்டமிடல், தேவையான நிதி ஒதுக்கீடுகள் மற்றும் நிர்வாக ஏற்பாடுகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.
குறிப்பாக நெடுந்தீவு பிரதேச செயலகம் மற்றும் பிரதேச சபையின் ஊடாக மேற்கொள்ளப்பட வேண்டிய நிதி விடயங்கள் தொடர்பிலான ஒழுங்கமைப்புக்கள் தொடர்பில் அரசாங்க அதிபர் கெளரவ தவிசாளர் மற்றும் உத்தியோகத்தர்களுடன் கலந்துரையாடி உரிய வழிகாட்டுதல்களை வழங்கினார்.

இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் கே.சிவகரன், உதவி மாவட்டச் செயலாளர் உ.தா்சினி, நெடுந்தீவு பிரதேச செயலாளர் என்.பிரபாகரன், கடற்படை அதிகாரிகள், நெடுந்தீவு பிரதேச சபையின் தொழில் நுட்ப உத்தியோகத்தர், விடய உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.