தமிழர் பகுதியொன்றில் அனுமதிப்பத்திரம் இன்றி மாடுகளை ஏற்றிச் சென்ற மூவர் கைது
வவுனியா, பூவரசன்குளம் பகுதியில் அனுமதிப்பத்திரம் இன்றி மாடுகளை ஏற்றிச் சென்ற மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 20 மாடுகளும் மீட்கப்பட்டுள்ளதாக பூவரசன்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று (08) இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
வவுனியா, பூவரசன்குளம் சந்தியில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார், ஒரு லொறியை வழிமறித்து சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, குறித்த லொறியில் அனுமதிப்பத்திரம் இன்றி 20 மாடுகள் கொண்டு செல்லப்பட்டமை கண்டறியப்பட்டது.
லொறியில் இருந்த மூவரையும் கைது செய்த பொலிஸார், 20 மாடுகளையும் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
இந்த மாடுகள் மல்லாவி பகுதியிலிருந்து குருநாகல் பகுதிக்கு கொண்டு செல்லப்படவிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
மேலும், இது தொடர்பாக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.