15 வயது சிறுமியின் கடத்தல் சம்பவத்தில் மூவர் கைது
மினுவாங்கொடையில் 15 வயது சிறுமி கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு இவர்கள் நேற்றைய தினம் மினுவாங்கொடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞர், அவரின் தந்தை மற்றும் ஒரு பெண் கைது செய்யப்ட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைதானவர்கள் மினுவாங்கொடை நீதிவான் நீதிமன்றின் பதில் நீதவானிடம் முன்னிலை படுத்திய போது அவர்கள் இன்றைய தினம் வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மினுவாங்கொடை ஓபாத பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயதுடைய சிறுமி ஒருவர் கடந்த ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாயார் ஊடகங்களுக்கு தெரிவித்த கருத்து
குறித்த விடயம் தொடர்பில் கடத்தப்பட்டவரின் தாயார் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் பத்தாம் திகதி எனது மகள் வீட்டில் இருந்தார். எனது மகளுக்கும் அவரை கடத்திச் சென்ற இளைஞருக்கும் முன்னதாக காதல் தொடர்பு காணப்பட்டது.
மகளை கடத்தி சென்ற இளைஞர்
எமது வீட்டாரும், நானும் அதற்கு இணக்கம் தெரிவிக்கவில்லை. எனினும் இளைஞரின் வீட்டால் தொடர்ச்சியாக பிரச்சினைகள் ஏற்படுத்தப்பட்டன. இந்த சம்பந்தத்தை எவ்வாறாவாது நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் பத்தாம் திகதி தீக்சன என்ற குறித்த இளைஞரின் அத்தை மற்றும் அத்தையின் மகள், மகன் ஆகியோர் மகளை கடத்திச் செல்ல வந்தனர். நான் அந்த நேரம் வெளிநாட்டில் வசித்தேன்.
இதன்போது மகள் தொலைபேசி அழைப்பினை மேற்கொண்டார். “அம்மா என்னை சிலர் கடத்த வருகின்றனர்” என தெரிவித்தார். வீட்டிலிருந்த பணிப்பெண்ணை அழைத்துக் கொண்டு அங்கிருந்து வெல்லவாய செல்லுமாறு கூறினேன்.
வெல்லவாய வீட்டில் வசித்த நிலையிலேயே மகள் கடத்தப்பட்டுள்ளார். வீட்டில் பணிக்கு அமர்த்தப்பட்டிருந்த பெண்ணையும் தாக்கி விட்டு மகளை கடத்திச் சென்றுள்ளனர். குறித்த இளைஞரின் வீட்டாருக்கு பல தடவைகள் நான் அறிவித்தேன். அதனையும் அவர்கள் பொருட்படுத்தவில்லை.
காப்பாற்றுமாறு கேட்ட மகள்
“நாங்கள் பணத்திற்காக மனித கொலை செய்பவர்கள். சட்டம் தொடர்பில் நாங்கள் நன்கு அறிவோம்” என அச்சுறுத்தினார்கள்.
மகளும் பல தடவைகள் அழைப்பினை ஏற்படுத்தி இந்த தொடர்பிலிருந்து தன்னை காப்பாற்றுமாறு கேட்டுக் கொண்டார்.
எனது மகளை வீட்டுக் காவலிலேயே அவர்கள் வைத்துள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தன்னுடைய மகளை பார்த்தால் தகவல் வழங்குமாறு மகளின் புகைப்படத்தை வெளியிட்டு குறித்த தாய் பொது மக்களிடம் உதவி கோரியுள்ளார்.