பதவி பறிபோகும் ஆபத்தில் மத்திய வங்கி ஆளுநர்
புதிய நிதியமைச்சர் ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவியேற்றதன் பின்னர் பொருளாதார நெருக்கடி தொடர்பில் மத்திய வங்கி ஆளுநருடன் ஒருபோதும் கலந்துரையாடவில்லை என கூறப்படுகின்றது.
இதனை ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார். எனவே ரணில் விக்ரமசிங்கவின் முதல் பலி தற்போதைய மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவே எனவும் அவர் குறிப்பிட்டார்.
கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டபோதே அவர் இதனை கூறினார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவியேற்று 10 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது. இந்தக் காலப்பகுதியில் மத்திய வங்கி ஆளுநரை பிரதமர் எப்போதாவது சந்தித்தாரா? என்பது எமக்கு தெரியாது.
மத்திய வங்கியின் ஆளுநருக்கும் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் பாரிய முரண்பாடு காணப்படுகின்றமை எமக்குத் தெரியும். கடந்த 2015க்கு பிறகு நடந்த சம்பவங்களுடன் தொடர்புடையதாக பல தகவல்கள் உள்ளன.
ஏனெனில் மத்திய வங்கியின் ஆளுனர் கலாநிதி நந்தலால் வீரசிங்க பிணைமுறி கொடுக்கல் வாங்கலின் போது பிரதி ஆளுநராக இருந்தார். பிணை முறி ஒப்பந்தத்தை கடுமையாக எதிர்த்தவர்களில் கலாநிதி நந்தலாலும் ஒருவர் எனவும் நளின் கூறினார்.
மத்திய வங்கி போன்ற ஒரு நிறுவனம் அரசியலில் இருந்து விடுபட்ட சுதந்திரமான நிறுவனமாக இருக்க வேண்டும் என்பதை நாங்கள் மரியாதையுடனும் பொறுப்புடனும் கூறுகிறோம் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார இதன்போது மேலும் தெரிவித்துள்ளார்.