அன்றும் இன்றும் தேசிய இனப்பிரச்சினை தீர்வுக்கு இவர்களே முட்டுக்கட்டை!
அன்று பண்டா செல்வா ஒப்பந்தம் கிழித்தெறியப்படுவதற்கு காரணமான மகாநாயக்கர்களே, இன்று மாகாண சபைகளுக்கான காணி, பொலிஸ் அதிகாரங்களை வழங்கும் விடயத்திலும் தடையாக இருக்கின்றார்கள் என த. தே. கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் விசனம் தெரிவித்துள்ளார்.
அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமாசிங்க மகாநாயக்கர்களை சந்தித்தபோது மாகாண சபைகளுக்கு அதிகாரங்களை வழங்கக் கூடாது விடுக்கப்பட்ட கோரிக்கை தொடர்பில் இன்று மாலை ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறினார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
சுதந்திரத்திற்கு முன்பாக இலங்கை இனப்பிரச்சினைக்கான தீர்வை தரப் போவதாகவும், அதன் ஒரு அம்சமாக 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமுலாக்கம் செய்யப்போவதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டிருந்தார்.
காணி, பொலிஸ் அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு வழங்கக் கூடாது
எனினும் , நேற்று முன்தினம் ஜனாதிபதி அவர்கள், மகாநாயக்க தேரர்களை சந்தித்த போது, 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த கூடாது என்றும் குறிப்பாக காணி, பொலிஸ் அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு வழங்கக் கூடாது என்றும் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.
இலங்கை சுதந்திரமடைந்த காலத்திலிருந்து தொடர்ந்து 75 ஆண்டுகளாக இனப்பிரச்சனைக்கான தீர்வுகளை எட்டுவதற்கான பல்வேறுபட்ட ஒப்பந்தங்கள், உடன்படிக்கைகள், பேச்சுவார்த்தைகள் என்பன முன்னெடுக்கப்பட்டாலும், அவை அனைத்தும் பேரினவாத சக்திகளினால் தடைப்படுத்தப்பட்டே வந்திருக்கின்றன.
அந்த வரிசையில் தற்போது 13ஆவது திருத்தத்தை கூட முழுமையாக அமுல்படுத்தக் கூடாது எனும் கோரிக்கை விடப்பட்டுள்ளது. அரசாங்கத்தினால் தமிழர்களுக்கு தீர்வு கிட்டாது என்பதும், உள்நாட்டு பொறிமுறைகள் மூலமாக இலங்கையின் தேசிய இனப்பிரச்சினையைத் தீர்க்க முடியாது.
அதனால் சர்வதேச பொறிமுறை ஒன்று தான் இலங்கையின் தேசிய இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான ஒரேவழி எனும் விடயம் மகாநாயக்கர்களின் இந்த கருத்தின் ஊடாக வலியுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
1956ஆம் ஆண்டில் பண்டா செல்வா ஒப்பந்தம் கிழித்தெறியப்படுவதற்கும், தற்போது மாகாண சபைகளுக்கான அதிகாரங்களை வழங்கும் விடயத்திலும் இதே மகாநாயக்கர்கள் தான் தடையாக இருக்கின்றார்கள்.
எனவே இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் தமிழ் மக்களின் இனப்பிரச்சனையை தீர்ப்பதற்கு உரிய செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் இதன்போது கோரிக்கை முன்வைத்தார்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.