பூநகரிக்கு குட்டித்தேர்தல் இல்லை
இலங்கையில் உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வதற்கான திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் பூநகரியில் தேர்தல் இடம்பெறாது என கூறப்படுகின்றது.
அம்பாறை மாவட்டத்தில் கல்முனை மாநகர சபை மற்றம் தெஹியத்தகண்டிய பிரதேச சபை, மன்னார் மாவட்டத்தில் மன்னார் பிரதேச சபை, கிளிநொச்சி மாவட்டத்தில் பூநகரி பிரதேச சபை, காலி மாவட்டத்தில் எல்பிட்டிய பிரதேச சபை தவிர்ந்த ஏனைய உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்களே நடத்தப்படவுள்ளன.
336 உள்ளூரதிகார சபைகளுக்கான தேர்தல்
மார்ச் 17,முதல் மார்ச் 20 ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என்று தேர்தல் ஆணையம் நேற்று (03) அறிவித்துள்ளது.
நேற்று (03) முதல் மார்ச் மாதம் 19 ஆம் திகதி நண்பகல் 12.00 மணி வரை தேர்தலுக்கான வைப்புப் பணம் கையேற்கும் நடவடிக்கைகள் இடம்பெறுமென ஆணைக்குழு அறிவித்துள்ளது.
தேர்தலுக்கான வேட்புமனு கையேற்கும் நடவடிக்கைகள் மார்ச் 17 – 19 ஆம் திகதி வரை மற்றும் மார்ச் 20 நண்பகல் 12.00 மணி வரையும் அந்தந்த மாவட்டத் தெரிவத்தாட்சி அலுவலர், மாவட்டச் செயலாளர் அரசாங்க அதிபர் அலுவலகத்தில் இடம்பெறுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் உள்ள 28 மாநகர சபைகள், 36 நகர சபைகள், 272 பிரதேச சபைகள் ஆகிய 336 உள்ளூரதிகார சபைகளுக்கான தேர்தல்களே இவ்வாறு நடத்தப்படவுள்ளன.
மாநகர முதல்வர்கள், பிரதி மாநகர முதல்வர்கள், தவிசாளர்கள், பிரதி தவிசாளர்கள் மற்றும் உறுப்பினர்களைத் கேர்ந்தெடுப்பதற்காக வேட்புமனு பத்திரங்கள் கையேற்பது பற்றிய அறிவித்தல் ஏற்கனவே உள்ளூரதிகார சபைகளில் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இதேவேளை, உள்ளூராட்சி சபைத் தேர்தல் இடம்பெறும் தினம் தொடர்பில் மார்ச் 20ஆம் திகதி வேட்புமனு கையேற்பு நிறைவடைந்ததைத் தொடர்ந்து அறிவிக்கப்படுமென ஆணைக்குழு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது .