பிரான்ஸில் வீதிக்கு தள்ளப்படும் இலங்கைத் தமிழ் குடும்பத்திற்கு நேர்ந்த கதி
பிரான்ஸில் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழ் குடும்பம் ஒன்று கடுமையான நெருக்கடி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
பிரான்ஸின் 63ஆவது பிராந்தியத்தில் உள்ள Clermont-Ferrand பகுதியில் வசித்து வரும் இந்தக் குடும்பம், தங்களின் புகலிட விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதையடுத்து தற்போது தங்கியுள்ள வீட்டை விட்டு வெளியேற்றப்படும் நிலைக்கு உள்ளாகியுள்ளது.
கடும் குளிர்காலம் காரணமாக வீடுகளில் இருந்து வெளியேற்றங்களுக்கு பொதுவாகத் தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும், புகலிடக் கோரிக்கை மறுக்கப்பட்டமை காரணமாக இந்தக் குடும்பம் சில நாட்களில் வீடற்றவர்களாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், அந்தக் குடும்பத்தின் துயர நிலையை அறிந்த உள்ளூர் பெண் ஒருவர் அவர்களுக்கு உதவ முன்வந்துள்ளார்.
பிராந்தியத்தில் உள்ள தொண்டு நிறுவனங்களும் அவசர தங்குமிடங்களும் ஏற்கனவே நிரம்பியுள்ளதால், அவர் ஒரு தனித்துவமான தீர்வை மேற்கொள்ள தீர்மானித்துள்ளார்.
அதன்படி, அவர் தன் பெயரிலேயே ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, அந்த வீட்டை குறித்த இலங்கைத் தமிழ் குடும்பத்திற்குத் தங்குவதற்காக வழங்க திட்டமிட்டுள்ளார்.
மேலும், அந்த வீட்டிற்கான மாதாந்திர வாடகையைத் தானே செலுத்தவும் அவர் முன்வந்துள்ளார்.
இந்த முயற்சிக்கு ஆதரவாக, அந்தப் பெண்ணின் சகோதரி பிணையாளராக (guarantor) இருப்பதற்கும் இணக்கம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம், புகலிடக் கோரிக்கைகள் நிராகரிக்கப்படும் புலம்பெயர் குடும்பங்கள் எதிர்கொள்ளும் மனிதாபிமான சவால்களை மீண்டும் வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது.