பொலிஸ் மாஅதிபர் காரியாலயத்தின் 6ஆவது மாடியில் திருட்டு !
கொழும்பு, கோட்டை, ஒல்கொட் மாவத்தை பகுதியில் உள்ள கொழும்பு பிரதி பொலிஸ் மாஅதிபர் காரியாலயத்தின் 6ஆவது மாடியில் திருட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் கொழும்பு பிரதி பொலிஸ் மாஅதிபர் காரியாலயத்தின் பொறுப்பதிகாரி , கொழும்பு மத்திய பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவுக்கு செப்டெம்பர் 24 ஆம் திகதி முறைப்பாடு அளித்துள்ளார்.
இந்த திருட்டு சம்பவம் ஆகஸ்ட் 01 ஆம் திகதியிலிருந்து செப்டெம்பர் 24 ஆம் திகதிக்கு உட்பட்ட காலப்பகுதியில் இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
கொழும்பு பிரதி பொலிஸ் மாஅதிபர் காரியாலயத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு சிசிரிவி கமராக்கள் பொருத்தப்பட்டிருந்த போதிலும் திருடர்கள் உள்நுழைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
திருடர்கள் கொழும்பு பிரதி பொலிஸ் மாஅதிபர் காரியாலயத்தின் கதவை உடைத்து உள்நுழைந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
திருடர்கள் கொழும்பு பிரதி பொலிஸ் மாஅதிபர் காரியாலயத்தில் உள்ள மின்சாரக் கம்பிகளைத் திருடிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
திருட்டு சம்பவம் தொடர்பில் கொழும்பு மத்திய பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.