இலங்கை கிரிக்கெட் அணி மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதி சுட்டுக்கொலை
2009 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் சுற்றுலா மேற்கொண்டிருந்த இலங்கை கிரிக்கெட் அணியை குறிவைத்து 2009 ஆம் ஆண்டு மார்ச் 3 ஆம் திகதியன்று தீவிரவாத தாக்குதலை நடத்திய முக்கிய பயங்கரவாதியாக கருதப்பட்ட அல்கொய்தா மற்றும் தெஹ்ரீக் இ தலிபான் பாகிஸ்தான் கயாரா குழுவைச் சேர்ந்த இக்பால் என்ற பாலி கயாரா சுட்டுக்கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் பொலிஸார் உறுதி செய்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தானின் ஃபதே மூர் பகுதிக்கு அருகே சில தினங்களுக்கு முன்னர் பாகிஸ்தான் பொலிஸாருடன் நடந்த மோதலில் அவர் சுட்டுக்கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் பொலிஸ் அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
2009 ஆம் ஆண்டு லாகூரில் இலங்கை கிரிக்கெட் அணி மீது தாக்குதல் நடத்தப்பட்டு, இலங்கை கிரிக்கெட் அணியை பாதுகாத்து வந்த பாகிஸ்தான் பொலிஸார் எழு பேர் இதன்போது உயிரிழந்தனர்.
இந்தத் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல்களில் இலங்கை கிரிக்கெட் வீரர்களான மஹேல ஜயவர்தன, குமார் சங்கக்கார, அஜந்த மெண்டிஸ், திலன் சமரவீர, தரங்க பரணவிதான, சமிந்த வாஸ், சுரங்க லக்மால் ஆகிய 7 வீரர்கள் காயமடைந்தனர்.
இதையடுத்து, போட்டித் தொடரை இடைநடுவில் நிறுத்திய இலங்கை கிரிக்கெட் குழாம் நாடு திரும்பியது. இந்த பயங்கரவாத தாக்குதலை நடத்திய பாலி என்ற இக்பால், பாகிஸ்தானில் தேடப்படும் பயங்கரவாதிகளில் ஒருவராக இருந்ததால், அவரை பிடிப்பவருக்கு அல்லது கொலை செய்பவருக்கு அந்நாட்டு மதிப்பில் 10.5 மில்லியன் ரூபாய் பரிசு வழங்கப்படும் என பாகிஸ்தான் பொலிஸார் அறிவித்திருந்தனர்.
இந்த குற்றவாளி மீது 26 பயங்கரவாத வழக்குகள் தொடர்பில் பாகிஸ்தான் பொலிஸாரால் தேடப்பட்டு வந்திருந்த நிலையில், பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் பாலி என்ற இக்பால் உயிரிழந்துள்ளார்.
இதன்போது இலங்கை அணியினர் பயணித்த பேரூந்தை செலத்திய சாரதியின் புத்திசாலித்தனமான மற்றும் துணிச்சலான நடத்தை காரணமாக, இலங்கை வீரர்களின் உயிரைக் காப்பாற்ற முடிந்தமையை நினைவில் கொள்ளத்தக்கது.