செஞ்சிலுவை சங்கத்திடம் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் வலியுறுத்தியுள்ள விடயம்
எமது அன்புக்குரியவர்களை இழந்து நாம் வெகுவாகத் துன்பப்படுகிறோம் என்பதை அரசாங்கம் புரிந்துகொள்ளவேண்டும் என்றும், ஆகவே காணாமல்போனோருக்கு என்ன நேர்ந்தது என்பதைக் கண்டறிவதற்கு அவர்கள் உதவவேண்டும் என்றும் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இலங்கையில் முதன்முறையாக சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் ஏற்பாட்டில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கான தேசிய மாநாடு கடந்த 12 ஆம், 13 ஆம் திகதிகளில் கொழும்பில் நடைபெற்றது.
இம்மாநாட்டில் நாடளாவிய ரீதியில் வெவ்வேறு மாகாணங்களைச் சேர்ந்த, மாறுபட்ட சமூகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற 51 குடும்பத்தினர் பங்கேற்றிருந்தனர்.
இம்மாநாடு வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்ட வெவ்வேறு பகுதிகளைச்சேர்ந்த குடும்ப உறுப்பினர்கள் ஒன்றாகக் கலந்துரையாடுவதற்கும், தமது அன்புக்குரியவர்களைத் தேடும் செயன்முறையில் தாம் முகங்கொடுத்திருக்கும் நெருக்கடிகள் மற்றும் சவால்கள் பற்றி ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொள்வதற்குமான வாய்ப்பை வழங்கியது.
இந்த மாநாட்டில் கலந்துகொண்ட குடும்ப உறுப்பினர்கள், வலிந்து காணாமலாக்கப்பட்ட தமது அன்புக்குரியவர்களுக்கு என்ன நேர்ந்தது? அவர்கள் எங்கே இருக்கிறார்கள்? என்ற உண்மை வெளிப்படுத்தப்படவேண்டும் என வலியுறுத்தினர்.
அதேபோன்று வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கு என்ன நேர்ந்தது என்பதைக் கண்டறியும் நோக்கிலும், அதனுடன் தொடர்புடைய ஏனைய நோக்கங்களுக்காகவும் நிறுவப்பட்டு, தற்போது இயங்குநிலையில் இருக்கும் கட்டமைப்புக்களின் செயற்பாடுகள், அடுத்தகட்ட நகர்வுகள் மற்றும் அடையப்படவேண்டிய முன்னேற்றங்கள் என்பன பற்றியும் இந்த மாநாட்டில் கலந்துரையாடப்பட்டது.
இதன்போது எமது அன்புக்குரியவர்களை இழந்து நாம் வெகுவாகத் துன்பப்படுகிறோம் என்பதை அரசாங்கம் புரிந்துகொள்ளவேண்டும் என்றும், காணாமல்போனோருக்கு என்ன நேர்ந்தது என்பதைக் கண்டறிவதற்கு உதவவேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் வலியுறுத்தினர்.