இஷாரா செவ்வந்தியின் சிரிப்பால் வெடிக்கும் புதிய சர்ச்சை
நேபாளத்தில் இருந்து கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டது உண்மையான இஷாரா செவ்வந்தியா என சந்தேகம் இருப்பதாக முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தனியார் யூடியூப் அலைவரிசை ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.
வாகனம் செலுத்தும் ஒருவர் சாதாரண தவறொன்றை விட்டு பொலிஸாரிடம் சிக்கினால் அவர் பதற்றமடைவார். ஆனால், கொலை குற்றம் புரிந்த செவ்வந்தி, பொலிஸாரிடம் சிக்கும் போது அவரது முகத்தில் எந்தவொரு பதற்றமும் இல்லை. மாறாக, அவரது முகத்தில் சிரிப்பே இருந்தது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தோற்றத்திலும் சந்தேகம்
அவர் மேலும் கூறுகையில், “செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிச் செல்லும் போது வெளியான புகைப்படங்களில் அவரது முகம் நீள்வட்டமாக இருந்தது. எனினும், தற்போது நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ள செவ்வந்தியின் முகம் வட்டமாக உள்ளது. செவ்வந்தியின் தோற்றத்திலும் நிறைய மாற்றங்கள் உள்ளன.
சாதாரணமாக ஒரு குற்றவாளியை அழைத்து வரும் போது, முகத்தை மூடி அழைத்து வருவது வழக்கம். ஆனால், செவ்வந்தி தொடர்பான புகைப்படங்கள் அனைத்தும் ஊடகங்களுக்கு பகிரப்பட்டன. எனினும், செவ்வந்தி தங்கியிருந்த இடத்தை பார்வையிட பொலிஸார் அவரை அழைத்து செல்லும் போது, முகத்தை மூடி அழைத்து செல்கின்றனர்.
இதேவேளை, பாதாள உலகக் குழுவின் தலைவர் கெஹல்பத்தர பத்மே தான் செவ்வந்தி நேபாளத்திற்கு தப்பிச்செல்ல உதவினார். அவர் பொலிஸாரிடம் சிக்கிய பின்னர் செவ்வந்தி தொடர்பான உண்மைகளை கூறுவார் என அனைவருக்கும் தெரியும்.
இவ்வாறிருக்க, செவ்வந்தி ஏன் நேபாளை விட்டு செல்லாமல் இருந்தார்? இவ்வாறான விடயங்கள் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன” எனத் தெரிவித்துள்ளார்.