சாதாரண தரப் பரீட்சை ; மேலதிக வகுப்புகளுக்கு இன்றுடன் தடை
2025 ஆம் ஆண்டுக்கான க .பொ.த சாதாரண தரப் பரீட்சையை பெப்ரவரி 17 முதல் 26 வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதால் இன்று புதன்கிழமை (11) நள்ளிரவு 12 மணி முதல் சாதாரண தரப் பரீட்சை தொடர்பான மேலதிக வகுப்புகளை நடத்துவதற்கு தடை செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.
தனியார் கல்வி நிறுவனமோ அல்லது அரச கல்வி நிறுவனமோ இந்த தடையை மீறி சாதாரண தரப் பரீட்சை தொடர்பான வகுப்புகள் அல்லது கருத்தரங்குகளை நடத்தினால் சட்டத்தின் கீழ் குற்றவாளிகளாக கருதப்படுவார்கள் எனவும் பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எவரேனும் ஒரு நபரோ அல்லது நிறுவனமோ இந்தச் சட்டங்களை மீறினால், அது குறித்து அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது பரீட்சைகள் திணைக்களத்திற்கோ அறிவிக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.