'லொக்கு பெட்டி'யின் பிரதான துப்பாக்கிதாரிக்கு நேர்ந்த கொடூர முடிவு
கிங் கங்கையில் கான்கிரீட் தூண் ஒன்றுடன் கைகளும் கால்களும் கட்டப்பட்ட நிலையில் மிதந்து கொண்டிருந்த ஆண் ஒருவரின் சடலம், 'லொக்கு பெட்டி' என அழைக்கப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் பிரதான துப்பாக்கிதாரியாகச் செயல்பட்ட விராஜ் ரஷ்மிக டி சொய்சா என்ற 'அல்மேதா' என்பவருடையது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சடலம் கடந்த 23ஆம் திகதி இரவு போத்தல பொலிஸாரால் கிங் கங்கையில் இருந்து மீட்கப்பட்டது. தலைப்பகுதியில் கடுமையான காயங்கள் காணப்பட்டதால் ஆரம்பத்தில் சடலத்தை அடையாளம் காண முடியாத நிலை ஏற்பட்டிருந்தது.
மேலதிக விசாரணை
எனினும், பொலிஸார் மேற்கொண்ட மேலதிக விசாரணைகளின் போது, அஹுங்கல்ல பகுதியைச் சேர்ந்த விராஜ் ரஷ்மிக டி சொய்சா என்ற 'அல்மேதா' என்பவருடையது என்பது உறுதிப்படுத்தப்பட்டது. அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாகக் கூறப்படும் பெண் ஒருவர், உடலில் இருந்த பச்சைக் குத்தல்களை அடிப்படையாகக் கொண்டு சடலத்தை அடையாளம் காட்டியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, அவரது பெற்றோரும் சடலத்தை அடையாளம் கண்டதுடன், கடந்த நான்கு ஆண்டுகளாக அவருடன் எந்தவித தொடர்பும் இல்லை என்றும் வாக்குமூலம் வழங்கியுள்ளனர்.
விசாரணைகளின் படி, உயிரிழந்த அல்மேதா, 'லொக்கு பெட்டி' தலைமையிலான குற்றக் கும்பலின் பிரதான துப்பாக்கிதாரியாகச் செயல்பட்டுள்ளார்.
மேலும், திருகோணமலை, அஹுங்கல்ல மற்றும் காலி பகுதிகளில் இடம்பெற்ற மூன்று கொலைச் சம்பவங்களிலும் துப்பாக்கிதாரியாக ஈடுபட்டிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், 13 கிலோகிராமுக்கும் அதிகமான போதைப்பொருளுடன் ஒருமுறை கைது செய்யப்பட்டிருந்த அவர் மீது போதைப்பொருள் கடத்தல் தொடர்பான பல வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸாரால் தேடப்பட்டு வந்த நிலையில் தலைமறைவாக இருந்த அல்மேதா, 'கரன்தெனிய சுத்தா' தரப்பினருக்கு கடுமையான அச்சுறுத்தலாகக் கருதப்பட்டவர் என்றும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், சடலத்தின் மீது நடத்தப்பட்ட பிரேதப் பரிசோதனையில், கூர்மையான ஆயுதத்தால் கழுத்து வெட்டப்பட்டதன் காரணமாகவே மரணம் ஏற்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.