காதலை ஏற்க மறுத்த 16 வயது மாணவிக்கு நேர்ந்த கதி ; இளைஞனின் விபரீத செயல்
இந்தியாவில் மேற்கு வங்க மாநிலத்தில் கொல்கத்தாவில் காதலை ஏற்க மறுத்ததாகக் கூறி 16 வயது பாடசாலை மாணவி ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொல்கத்தா அருகிலுள்ள சாந்தினிபாகன் பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஆரம்பகட்ட விசாரணை
உயிரிழந்த மாணவி 10ஆம் வகுப்பில் கல்வி கற்று வந்தவர். பாடசாலை முடிந்து சைக்கிளில் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, 24 வயதான சமீர் தாஸ் என்ற இளைஞர் அவரை வழிமறித்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அதனைத் தொடர்ந்து சமீர் தாஸ் தன்னிடம் வைத்திருந்த கத்தியால் மாணவியின் கழுத்து, வயிறு மற்றும் கைகளில் பலமுறை குத்தியதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
பலத்த காயமடைந்த மாணவி வீதியில் ரத்த வெள்ளத்தில் கிடந்த நிலையில், அங்கிருந்த பொதுமக்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இதனிடையே, தாக்குதலுக்குப் பின்னர் தப்பிச் செல்ல முயன்ற சமீர் தாஸை அங்கிருந்த பொதுமக்கள் மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
முர்ஷிதாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த சமீர் தாஸ், தோம்ஜூர் பகுதியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றி வந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆரம்பகட்ட விசாரணையில், தனது காதலை மாணவி ஏற்க மறுத்ததால் ஆத்திரத்தில் இந்தக் கொலையைச் செய்ததாக சந்தேகநபர் வாக்குமூலம் அளித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபருக்கு எதிராக கொலைக் குற்றச்சாட்டின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.