டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வரலாறு காணாத வீழ்ச்சி
அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், டொலரின் விற்பனை விலை 334 ரூபாயைத் தாண்டியுள்ளது என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
மத்திய வங்கி இன்று (18) வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ தினசரி நாணய மாற்று வீத அறிக்கையின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 326.74 ரூபாயாகவும், விற்பனை விலை 334.26 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.

இதற்கு முன்னர் கடந்த 2023 ஆம் ஆண்டு நவம்பர் 29 ஆம் திகதியன்று டொலரின் விற்பனை விலை 334.22 ரூபாயாக பதிவாகியிருந்தது.
அதன் பின்னர் பதிவான அதிகூடிய விற்பனை விலையாக இன்றைய பெறுமதி அமைந்துள்ளது.
அதேவேளை, 2023 ஆம் ஆண்டு மார்ச் 20 ஆம் திகதியன்று டொலரின் கொள்வனவு விலை 331.71 ரூபாயாக பதிவாகியிருந்த நிலையில், அதன் பின்னர் பதிவான உயர்ந்த கொள்வனவு விலையாகவும் இன்றைய மாற்று விகிதம் காணப்படுகிறது.
உலகளாவிய சந்தை மாற்றங்கள், எண்ணெய் விலை உயர்வு மற்றும் உள்நாட்டு பொருளாதார காரணிகள் ஆகியவற்றின் தாக்கத்தால் டொலரின் பெறுமதி உயர்ந்துள்ளதாக பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்த நிலைமை தொடருமானால், இறக்குமதி செலவுகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலைகளிலும் மேலதிக தாக்கம் ஏற்படக்கூடும் எனவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.