பாரிஸில் ஒலிம்பிக் தீபத்தை ஏந்திய ஈழத் தமிழரை உற்சாகப்படுத்த வீதியில் குவிந்த இலங்கையர்கள்!
2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் ஒலிம்பிக் தீபத்தை ஏந்திய முதல் இலங்கையர் என்ற பெருமையை ஈழத்தை சேர்ந்த பிரபல பேக்கர் தர்ஷன் செல்வராஜா பெற்று இன்று வரலாறு படைத்துள்ளார்.
பிரான்ஸில் உள்ள இலங்கை தூதரகத்தின்படி, தர்ஷன் ஒலிம்பிக் தீபத்தை ஏந்தியபோது, அவரை உற்சாகப்படுத்துவதற்காக ஏராளமான பிரான்ஸ் வாழ் இலங்கையர்கள் பாரிஸ் வீதிகளில் வரிசையாக நின்றிருந்தனர்.
கடந்த 14 ஆம் திகதி பிரான்ஸ் சுதந்திர தினத்தன்று, தலைநகர் பரிஸை வந்தடைந்த ஒலிம்பிக் தீபம் பரிஸின் பிரதான வீதிகளில் பயணித்தது.
இதில் ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கட்கிழமை ஆகிய இருநாட்களில், நாள் ஒன்றுக்கு 120 பேர் சுமந்து செல்லும் ஒலிம்பிக் தீபத்தின் பவனியில் இலங்கைத் தமிழன் தர்ஷன் செல்வராஜாவும் இணைந்துள்ளார்.
இலங்கையிலிருந்து 2006 ஆம் ஆண்டு பிரான்ஸ் சென்றடைந்த தர்ஷன் செல்வராஜா, பாரிஸ் நகரில் 2023 ஆம் ஆண்டு பாண் தயாரிப்பில் முதலிடம் பெற்றதுடன், பிரான்ஸ் ஜனாதிபதியின் வசிப்பிடமாகிய எலிஸே மாளிகைக்கு பாண் விநியோகம் செய்யும் உரிமையையும் பெற்றுள்ளார்.
வவுனியாவைச் சேர்ந்த தர்ஷன், சிறந்த பாண் உற்பத்தியாளருக்கான விருதை பாரிஸில் 2023 ஆம் ஆண்டு பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.