தையிட்டி விகாரை விவகாரம் ; இந்து ஆலயங்களை அழிக்கலாமா? ; எஸ். சிறீதரன் வலியுறுத்தல்
தொல்பொருள் அடையாளம் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் கொண்ட இந்து ஆலயங்கள் மற்றும் தேவாலயங்கள் இடித்து அழிக்கப்படுகின்ற நிலையில், சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட தையிட்டி புத்த விகாரை ஏன் அகற்றப்படக்கூடாது என தமிழரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறீதரன் கேள்வியெழுப்பினார்.
நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (6) இடம்பெற்ற பொது மக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், கடந்த காலங்களில் அவசரகால சட்டங்களை மையப்படுத்தி பல ஊடகவியலாளர்கள் காணாமலாக்கப்பட்டும், கொலை செய்யப்பட்டும் உள்ளதாக சுட்டிக்காட்டினார்.
நிமலராஜன், தராக்கி சிவராம் உள்ளிட்டோர் படுகொலை செய்யப்பட்ட போதிலும், குற்றவாளிகள் இதுவரை கண்டறியப்பட்டு தண்டிக்கப்படவில்லை என அவர் தெரிவித்தார்.
அதேபோல் ரவிராஜ் மற்றும் திருகோணமலை மாணவர்களின் கொலை சம்பவங்களுக்கும் இன்னும் நீதி கிடைக்கவில்லை என குறிப்பிட்டார்.

இதேவேளை, இராணுவத் தளபதியாக சவேந்திர சில்வா இருந்த காலத்தில், யாழ்ப்பாணம் தையிட்டி கிராமத்தில் தனியார் காணியில் ‘திஸ்ஸ விகாரை’ என்ற பெயரில் புத்த விகாரை ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும், அது அங்கு இருக்கக்கூடாது எனக் கூறி காணி உரிமையாளர்களும் மக்களும் தொடர்ச்சியாக போராட்டங்களை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.
கடந்த டிசம்பர் 21ஆம் திகதி நடைபெற்ற ஜனநாயக ரீதியான போராட்டத்தின் போது பொலிஸாரின் கடுமையான நடவடிக்கைகள் காணப்பட்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
அந்த போராட்டத்தின் போது வேலன் சுவாமி என்பவர் கடுமையாக இழுத்துச் செல்லப்பட்டு பொலிஸ் வாகனத்தில் ஏற்றப்பட்டதாகவும், இதே சம்பவம் பௌத்த பிக்குவுக்கு நடந்திருந்தால் பொலிஸார் வேறுபட்ட முறையில் நடந்துகொண்டிருப்பார்கள் எனவும் அவர் கூறினார்.
பௌத்த பிக்குகள் பொலிஸாரை தாக்கினாலும் அல்லது அவதூறாக பேசியாலும் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை; ஆனால் இந்து குருமார்கள் என்றால் கடுமையான அணுகுமுறை பின்பற்றப்படுகிறது என அவர் விமர்சித்தார்.
வலிகாமம் வடக்கு மற்றும் கிழக்கு பிரதேச சபைகளின் தவிசாளர்கள் மற்றும் உறுப்பினர்களும் பொலிஸாரால் இழுத்துச் செல்லப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும், கடந்த 3ஆம் திகதி புதிய புத்தர் சிலை ஒன்றை நிறுவ முயன்றபோது மக்கள் அதனை தடுத்ததாகவும், அங்கு போராட்டக்காரர்களைவிட அதிகளவில் பொலிஸார் குவிக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவித்தார்.

இது தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், வேலன் சுவாமியும் தானும் வழக்குகளை எதிர்கொண்டு வருவதாக அவர் கூறினார்.
குறிப்பாக 2010ஆம் ஆண்டு வரை வலிகாமம் வடக்குப் பகுதிகளான மயிலிட்டி, தோலகட்டி, தையிட்டி, பலாலி, வசாவிளாலான் உள்ளிட்ட இடங்களில் இருந்த பல இந்து ஆலயங்கள் முழுமையாக இடித்து அழிக்கப்பட்டுள்ளன என்றும், 150 ஆண்டுகள் பழமையான மயிலிட்டி புனித காணிக்கை மாதா ஆலயமும் அதில் அடங்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இவ்வாறு தொல்பொருள் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் கொண்ட இந்து ஆலயங்கள் மற்றும் தேவாலயங்கள் அழிக்கப்படும்போது, வலுக்கட்டாயமாக அமைக்கப்பட்ட புத்த விகாரை ஏன் அகற்றப்படவில்லை எனக் கேள்வியெழுப்பிய அவர், அனைத்து இனங்களையும் மதங்களையும் சமமாக அணுகும் ஆட்சி நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
வடக்கில் தொடரும் அடக்குமுறைகளை நிறுத்தி, நீதியான மற்றும் நேர்மையான தீர்வுகளை வழங்க அரசாங்கம் முன்வர வேண்டும் என்றும், அவ்வாறு செய்தால் நல்ல அரசியல் தலைமையாக அடையாளம் காணப்படுவீர்கள் எனவும் எஸ். சிறீதரன் தெரிவித்தார்.