தொழில்நுட்பத்தின் இருண்ட பக்கம் ; AI மூலம் உருவாகும் அபாயங்கள்
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தற்காலத்தில் படைப்பாற்றலுக்கு புதிய பாதைகளைத் திறந்தாலும், அது திகைப்பூட்டும் அபாயங்களையும் வெளிப்படுத்தியுள்ளது.
இதில் வளர்ந்து வரும் "பிகினி ட்ரெண்ட்" (bikini trend) மிகவும் ஆபத்தானது என நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

உற்பத்தித் திறன் கொண்ட AI (Generative AI) தளங்களில், ஒரு சிறிய கட்டளை (Prompt) அல்லது ஒரு பதிவின் மூலம், சாதாரண புகைப்படங்களை அந்த நபரின் அனுமதியோ அறிவோ இன்றி பாலியல் ரீதியான படங்களாகவோ அல்லது காணொளிகளாகவோ மாற்ற முடியும்.
இதனால் பாதிக்கப்பட்டவருக்கு ஏற்படும் தாக்கம் உண்மையானது, நிரந்தரமானது மற்றும் தனிப்பட்ட ரீதியில் மிக ஆழமானது.
ஈலோன் மஸ்க்கின் 'Grok' தளம், இத்தகைய தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்களைத் தடுக்கத் தவறியதற்காக உலகளாவிய ரீதியில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
இது தொடர்பில் அண்மைய நாட்களில் வழக்கும் தொடரப்பட்டிருந்தது. சிறுவர்கள் மீதான துஷ்பிரயோகம் (CSAM), ஒப்புதல் பெறப்படாத அந்தரங்கப் படங்கள் (NCII) மற்றும் பெண்களுக்கு எதிரான இழிவான உள்ளடக்கங்களை உருவாக்க இந்தத் தளம் பயன்படுத்தப்படுவது குறித்து நிபுணர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இலங்கையைப் போன்ற சமூகங்களில் இது மிகவும் ஆபத்தானது என நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். கௌரவத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் இலங்கை சமூகத்தில், இத்தகைய போலியான படங்கள் ஒருவரின் வாழ்க்கையையும் குடும்பத்தின் கௌரவத்தையும் சில நிமிடங்களில் அழித்துவிடும்.
அண்டை நாடான இந்தியா, இத்தகைய பிரச்சினைகளைச் சரிசெய்யத் தவறினால் சட்டப் பாதுகாப்பை எதிர்கொள்ள நேரிடும் என ஈலோன் மஸ்க்கின் நிறுவனத்திற்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கையிலும் இத்தகைய கடுமையான ஒழுங்குமுறைகள் அவசியமாகும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.