யாழில் கோலாகலமாக ஆரம்பமாகிய பட்டத் திருவிழா ; பட்டத்துடன் வான்நோக்கி இழுத்துச் செல்லப்பட்ட இளைஞன்
யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறையில் வழமைபோல தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இம்முறையும் பட்டத் திருவிழா கோலாகலமாக ஆரம்பமாகியுள்ள நிலையில் இன்றைய கொண்டாட்டத்தின் போது எதிர்பாராத விதமாக இளைஞர் ஒருவர் பட்டத்துடன் வானில் இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் ஒன்று பதிவானது.
பல இளைஞர்கள் இணைந்து ஒரு பாரிய படலப் பட்டத்தை (கூட்டுப் பட்டம்) நீண்ட தொடுவைக்கயிறு (வடம்) மூலம் வானில் ஏற்ற முயற்சித்தனர்.

அப்போது வீசிய பலத்த காற்றினால் பட்டத்தின் விசை அதிகரித்து, வடத்தைப் பிடித்துக்கொண்டிருந்த இளைஞர்களில் ஒருவர் சடுதியாக வான்நோக்கி இழுத்துச் செல்லப்பட்டார்.
கீழிருந்த ஏனைய நண்பர்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்றிணைந்து செயற்பட்டு, வடத்தை மெல்ல மெல்லக் கட்டுப்படுத்தி அந்த இளைஞரை பாதுகாப்பாகத் தரையிறக்கினர்.
வல்வெட்டித்துறைப் பகுதி விசித்திரமான மற்றும் பிரம்மாண்டமான பட்டங்களை உருவாக்குவதில் உலகப் புகழ்பெற்றது.
ஒவ்வொரு ஆண்டும் தைப்பொங்கலை முன்னிட்டு இங்கு நடைபெறும் பட்டப்போட்டிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொள்வர்.
இன்றைய சம்பவத்தில் இளைஞர் எவ்வித காயமுமின்றி உயிர் தப்பிய நிலையில், பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி பட்டங்களை ஏற்றுமாறு பல்வேறு தரப்பினரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.