வீதியில் சென்ற மாணவிகளிடம் ஆசிரியரின் முகம் சுழிக்க வைத்த செயல்! காட்டிக் கொடுத்த CCTV
காலியில் வீதியில் சென்ற மாணவிகளின் வெள்ளை நிறச் சீருடையில் சிவப்பு மையைத் தெளித்த ஆசிரியர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். காலி பிரபல சர்வதேச பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் ஆசிரியர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 32 வயதுடையவர் எனவும், அவர் கொழும்பின் கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபர் சுமார் ஒரு மாதத்திற்கு முன்னரே காலியில் உள்ள குறித்த சர்வதேச பாடசாலையில் ஆசிரியராகப் பணியில் இணைந்துள்ளார்.

மாணவிகளின் பின்புறமாக மை தெளிப்பு
காலி, 'சரவந்துகடை' சந்தி பகுதியில் பொது இடங்களில் வைத்து பல மாணவிகளின் சீருடைகளின் பின்புறமாக இவர் திட்டமிட்டுச் சிவப்பு மையைத் தெளித்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் இருந்த சிசிடிவி (CCTV) கமெராவில் பதிவாகியிருந்தது.
இக்காணொளி சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து, பொலிஸார் விசாரணைகளைத் தீவிரப்படுத்தினர். காலி பொலிஸார் மற்றும் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் இணைந்து நடத்திய தேடுதல் நடவடிக்கையின் மூலம் குறித்த ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.
சந்தேகநபரான ஆசிரியர், காலி பொலிஸின் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தினால் காலி மேலதிக நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை காலி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.