இலங்கையை மீட்பதற்கு தயாராகும் தமிழர் இருவர் உட்பட மூவர்
கடனை மீள் செலுத்தக் கூடிய இயலுமை தொடர்பான அறிக்கையை சர்வதேச நாணய நிதியம் கோரியுள்ளது. எனவே தேசிய மற்றும் சர்வதேச கலப்பு பொருளாதார நிபுணர்களைக் கொண்ட குழுவை உடனடியாக ஸ்தாபித்து 3 வாரங்களுக்குள் அறிக்கையை சர்வதேச நாணய நிதியத்திடம் கையளிக்கவுள்ளதாக நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.
எவ்வாறிருப்பினும் சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பு கிடைக்கும் வரையிலான இடைப்பட்ட காலப்பகுதியில் நெருக்கடிகளை தவிர்த்துக் கொள்ள இந்தியா, சீனா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நட்பு நாடுகளின் ஒத்துழைப்புக்களை பெற்றுக் கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் நிதி அமைச்சர் தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்காக வொஷிங்டன் சென்றுள்ள நிதி அமைச்சர் அலி சப்ரி அங்கிருந்து மெய்ந்நிகர் ஊடாக இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு இந்த விடயங்களைத் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில், சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தின் 4 ஆம் சரத்தின் கீழ் இலங்கையின் பொருளாதார நிலைமை தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் , எமக்கு கடனை மீள செலுத்தக் கூடிய இயலுமை தற்போது இல்லை என்ற தீர்மானத்திற்கு வந்துள்ளனர்.
அதற்கமை பழைய கடன்களை மீள செலுத்துவதற்கான வேலைத்திட்டம் தொடர்பிலும் , எதிர்வரும் காலங்களில் பெற்றுக் கொள்வதற்கு எதிர்பார்க்கும் புதிய கடன்களை எவ்வாறு மீளச் செலுத்துவோம் என்பது தொடர்பிலும் சர்வதேச நாணய நிதியத்துடன் சாதகமான இணக்கப்பாட்டை எட்ட வேண்டியுள்ளது.
அதற்கமைய எம்மை (நிதி அமைச்சர், மத்திய வங்கி ஆளுனர், நிதி அமைச்சின் செயலாளர்) நியமித்த 24 மணித்தியாலங்களுக்குள் கடன் வழங்குனர்களுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கு தீர்மானித்தோம். தற்போது எமக்கு வெளிநாட்டு கடன்களை மீள செலுத்தக் கூடிய இயலுமை இல்லை என்பதை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
இம்மாத்தில் 500 மில்லியன் டொலர்களையும், ஜூனில் மேலும் 500 மில்லியன் டொலரையும் , ஜூலை மாதத்தில் ஒரு பில்லியன் டொலரையும் செலுத்த வேண்டியிருந்தது. இதனை செலுத்த முடியாது என்பதனாலேயே கடன் மீள் செலுத்தலை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானித்தோம். இதன் அர்த்தம் கடனை செலுத்தப் போவதில்லை என்பதல்ல. மாறாக குறித்த காலத்தில் அன்றி சற்று கால தாமதமாக அதனை செலுத்தல் ஆகும்.
எவ்வாறிருப்பினும் இதனை வாய் மொழி மூலமாக மாத்திரம் கூறிக் கொண்டிருப்பது போதாது. அதற்கான வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அதற்கமையவே நிதி மற்றும் நீதி ஆலோசகர்களை நியமிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 10 - 15 நாட்களுக்குள் இவர்களை நியமிக்க எதிர்பார்த்துள்ளோம். மேலும் வரி வருமானத்தை எவ்வாறு மீளப் பெற்றுக் கொள்வது உள்ளிட்ட வெ வ்வேறு வேலைத்திட்டங்கள் தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் , சர்வதேச நாணய நிதியத்தின் முதல் நிலை துணை பணிப்பாளர் உள்ளிட்ட பல அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளோம்.
மேலும் எமது கடன் வழங்குனர்களுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து அவர்களது கடன்களை மீள செலுத்துவது குறித்து இணக்கப்பாடொன்றை எட்டுவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கப்பாட்டை எட்டி, அவர்களிடமிருந்து நிதி உதவியைப் பெற்றுக் கொள்வதற்கு குறிப்பிட்டவொரு காலம் செல்லும்.
எனவே அதற்கு இடைப்பட்ட காலத்தில் எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுப்பது என்பது தொடர்பிலும் அவதானம் செலுத்தியுள்ளோம். இந்தியாவுடன் முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தையும் வெற்றிகரமானதாக அமைந்துள்ளது.
அதற்கமைய மேலும் 500 மில்லியன் டொலர் கடன் திட்டத்தின் கீழ் எரிபொருளை வழங்குவதற்கும் , அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்ட இறக்குமதிக்காக மேலும் ஒரு பில்லியன் கடனுதவி கோரியமை தொடர்பில் சாதக பதிலை வழங்குவதற்கும் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
கடன் கடிதங்களை விடுவிப்பதற்காக பிராந்தியத்தில் பெற்றுக் கொள்ளப்படும் 1.4 பில்லியன் டொலரை மீள செலுத்த வேண்டியுள்ளது.
அதற்காக எதிர்வரும் ஜனவரி மாதம் வரை கால அவகாசத்தை வழங்குவதற்கு இந்தியா இரு மாதங்களுக்கொருமுறை உதவுவதாக உத்தியோகபூர்வமாக வாக்குறுதியளித்துள்ளது.
அதற்கமைய இந்தியாவிடமிருந்து குறுகிய கால தேவைக்கான பாரிய ஒத்துழைப்புக்கள் கிடைக்கவுள்ளன. சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து ஒத்துழைப்புக்களைப் பெற்றுக் கொள்வதற்காக அடிப்படை பேச்சுவார்த்தைகளே தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அவர்களிடம் உதவியைப் பெற இணக்கப்பாட்டை எட்ட வேண்டியுள்ளது. அவர்களுடன் இணக்கப்பாட்டை எட்டுவதற்கு முன்னர் எமது கடன் வழங்குனர்களுடன் இணக்கப்பாட்டை எட்ட வேண்டியுள்ளது. அதற்கமைய இந்தியா, ஜப்பான் மற்றும் சீனா என்பவற்றுடன் கடன் மீள் செலுத்தல் மறுசீரமைப்பிற்காக பிரத்தியேக பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வேண்டியுள்ளது.
இது தவிர ஐக்கிய நாடுகள்சபையின் அபிவிருத்தி நிதியத்துடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கான சந்தர்ப்பம் கிடைக்கப் பெற்றது. எமக்கு உதவியளிப்பதற்கு அவர்களும் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க வெளியுறவுகள் அமைச்சு மற்றும் அந்நாட்டு வர்த்தக அமைச்சின் அதிகாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளோம். இந்த அனைத்து பேச்சுவார்த்தைகளும் நாம் எதிர்பார்த்தபடி சாதகமான முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இலங்கை கடனை மீள செலுத்தும் என்பது சர்வதேச நாணய நிதியம் இந்தியாவிடம் உறுதிப்பாட்டைக் கோரியதாக தெரிவிக்கப்படும் செய்தி முற்றிலும் உண்மைக்கு புறம்பானது.
இது அரசியல் செய்யக் கூடிய நேரமல்ல. கப்பலொன்றில் சென்று கொண்டிருக்கும் போது சுழியில் மாட்டிக் கொண்டால் , அதன் கப்டன் மீதுள்ள கோபத்தில் கப்பலை கவிழ்த்து விட முடியுமா? ஆபத்தின்றி கப்பலை கரை சேர்த்த பின்னர் கப்டனுடனான கோபத்திற்கு தீர்வு காண வேண்டும்.
இதனையே நடைமுறை அரசியலிலும் பின்பற்ற வேண்டியுள்ளது. சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து செயற்படுவதற்கான ஒழுங்கு முறைமையொன்று காணப்படுகிறது. அதற்காகவே கடன் மீள் செலுத்தல் காலத்தை மறுசீரமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இது தொடர்பில் உலகிலுள்ள சிரேஷ்ட பொருளாதார நிபுணர்களுடன் கலந்தாலோசித்து வருகின்றோம்.
சிரேஷ்ட பொருளாதார நிபுணர்களான ஷாந்த தேவராஜன், இந்திரஜித் குமாரசுவாமி மற்றும் ஷாமினி குரே உள்ளிட்டோர் எவ்வித பேதமும் இன்றி இலங்கையின் மீட்சிக்கு உதவ எந்த சந்தர்ப்பத்திலும் தயாராகவுள்ளதாக உறுதியளித்துள்ளனர் என்றார்.