பெக்கோ சமன் கைபேசியில் 'நாமல் சேர்' என்ற பெயர் பதிவில் ; வெளிப்படுத்திய பிரதியமைச்சர்
கடந்த கால அரசாங்கங்கள் குற்றவாளிகளைப் பாதுகாத்து வந்துள்ளதாக பிரதியமைச்சர் மஹிந்த ஜயசிங்க குற்றஞ்சாட்டியுள்ளார்.
இன்றைய நாடாளுமன்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் இதனை தெரிவித்த அவர் திட்டமிட்ட குற்றக்குழு உறுப்பினர்களுடன் தொடர்புடைய தகவல்கள் குறித்தும் பல விடயங்களை முன்வைத்தார்.
மைத்திரி – ரணில் – சஜித் மற்றும் கோட்டா – ரணில் – ராஜபக்ஷ ஆகிய கூட்டுக்களின் அரசாங்கங்கள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழு மற்றும் குற்றவாளிகளை பாதுகாத்தன என்றும் அவர் குறிப்பிட்டார்.
திட்டமிட்ட குற்றக்குழு உறுப்பினர் பெக்கோ சமன் போன்றவர்களின் கைபேசிகளில், "நாமல் சேர்" மற்றும் "எனது சேர் ராஜபக்ஷ (மகே சேர் ராஜபக்ஷ)" ஆகிய பெயர்களின் தொலைபேசி இலக்கங்கள் பதிவாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
எனினும், "அது இந்த நாமலா அல்லது வேறொரு நாமலா, இந்த ராஜபக்ஷவா அல்லது வேறொருவரா என்று தெரியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். எனவே, நாமல் ராஜபக்ஷ போன்றவர்கள் வீணாக குழப்பமடைய தேவையில்லை.
கொலைகாரர்கள், குற்றக் குழுவினர் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்குவது எந்தவொரு நாகரிக நாட்டிலும் இல்லை என்று குறிப்பிட்ட அவர், அத்தகைய கோரிக்கைகளை தற்போதைய அரசாங்கம் நிராகரிப்பதாகவும் உறுதிபடத் தெரிவித்தார்.
தற்போதுள்ள தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் எந்தவொரு குற்றவாளியையும் பாதுகாக்காது என்றும், அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும் அவர் உறுதியளித்தார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நீர்கொழும்பில் நிமல் லான்சா போதைப்பொருளுடன் கைதானபோது, உலங்குவானூர்தியில் சென்று அவரைத் தழுவிக்கொண்டதாகக் கூறி, கடந்த கால அரசியல் தொடர்புகளை அவர் சுட்டிக்காட்டினார்.