லசந்த விக்ரமசேகர படுகொலை சம்பவம் ; 50 சிசிரிவி காட்சிகளை பயன்படுத்தி விசாரணை
வெலிகம பிரதேச சபையின் தலைவர் லசந்த விக்ரமசேகர படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், பொலிஸார் சுமார் ஐம்பது CCTV கெமராக்களின் காட்சிகளை ஆராய்ந்து விசாரணை செய்து வருவதாகத் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிதாரியும், அவர் தப்பிச் சென்ற மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றவரும் வழியில் தனித்தனியாகப் பிரிந்து இரண்டு வெவ்வேறு மோட்டார் சைக்கிள்களில் பயணித்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
வெலிகம பிரதேச சபையின் தலைவர் லசந்த விக்ரமசேகர நேற்று (22) காலை குறித்த பிரதேச சபைத் தலைவரின் அலுவலக அறைக்குள் வைத்து இனந்தெரியாத துப்பாக்கிதாரியினால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இதேவேளை, சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் பொலிஸ் குழுவினர், துப்பாக்கிதாரிகள் தாக்குதலின் பின்னர் மாத்தறை நோக்கிச் சென்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.
இதற்கிடையில், குறித்த விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து கலந்துரையாடும் கூட்டம் ஒன்று பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் தலைமையில், தென் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் குழுவின் பங்குபற்றுதலுடன் இன்று பிற்பகல் zoom தொழில்நுட்பம் ஊடாக இடம்பெற்றுள்ளது.
தென் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கித்சிறி ஜயலத்தின் நேரடிக் கண்காணிப்பில், தங்காலை பிராந்தியத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வசந்த குமாரவின் ஆலோசனையின் பேரில் 4 பொலிஸ் குழுக்கள் இக்கொலைச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.
இதேவேளை, வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர படுகொலை செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில், கொலையை வழிநடத்தியதாகக் கூறப்படும் 'மிதிகம ருவன்' என்பவர் நீதிமன்ற நடவடிக்கையொன்றுக்காக சிறைச்சாலையிலிருந்து வெளியே அழைத்துச் செல்லப்பட்டிருந்ததாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
குறித்த கொலை தொடர்பான குற்றச்சாட்டுக்களில் இருந்து தப்பிப்பதற்காகவே, அவர் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்படும் நாளன்றே தலைவரைக் கொலை செய்வதற்குத் திட்டமிட்டிருந்ததாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
அண்மையில் 'மிதிகம ருவனுக்கு'ச் சொந்தமானது எனக் கூறப்படும் 4 துப்பாக்கிகளை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் வெலிகம பிரதேசத்தில் இருந்து கண்டு பிடிப்பதற்கு தகவல் வழங்கியதும் கொலை செய்யப்பட்ட தலைவரே எனத் தெரிவிக்கப்படுகின்றது. இதனால், 'மிதிகம ருவன்' அவர் மீது கடும் கோபத்தில் இருந்ததாகவும் தகவல் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அதற்குப் பழிவாங்கும் வகையிலேயே அவர் இந்தக் கொலையை வழிநடத்தியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.