மண்சரிவால் சிதைந்து போன தமிழ் வர்த்தகரின் குடும்பம் ; ஒரே நொடியில் மாறிய வாழ்க்கை
பஹல கடுகன்னாவ கனேதென்ன பகுதியில் 22ஆம் திகதி காலை ஏற்பட்ட மண்சரிவு தொடர்பான சிசிடிவி காணொளி வௌியாகியுள்ளதுடன் தமிழ் வர்த்தகரின் வர்த்தக நிலையம் மீது மண்சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் வர்த்தகரின் குடும்பத்தில் இருவர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாறை ஒன்று வீடு மற்றும் உணவகம் மீது விழுந்ததில் 10 பேர் குறித்த இடிபாடுகளுக்குள் சிக்கிய நிலையில் பொலிஸார், அனர்த்த முகாமைத்துவ நிலையம், இராணுவத்தினர் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.

விபத்தில் உயிரிழந்தவர்கள்
இதன்போது 6 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஐவர் காயமடைந்துள்ளதாக கேகாலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த விபத்தில் உயிரிழந்தவர்களின் விபரம் வெளியாகியுள்ளது.
ராசலிங்கம் கருணாகரன் (வயது 66) பஹல, கடுகன்னாவ, ஹிங்குல.(கடை உரிமையாளரின் தந்தை), கிசாலிங்கம் நிஷாந்தனி கருணாகரன், வயது 38, பஹல, கடுகன்னாவ, ஹிங்குல, (கடை உரிமையாளரின் மனைவி)
சமரகோன் முதியன்சேலாகே, லஹிரு மதுசங்க சமரகோன் (வயது 31), லிண்டன் ஜனாக குமார ஜயசிங்க(வயது 66), ருவன் குமார அபேசிறி சமரநாயக்க (வயது 42), எம்பிலிப்பிட்டிய குணரத்ன முதியன்சலாகே, புலஸ்தி பண்டார (வயது 33).
மீட்பு பணிகள் 22ம் திகதி இரவு சுமார் 7.15 மணியளவில் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டது.
கொழும்பு - கண்டி வீதியின் பகுதி இன்னும் மூடப்பட்டுள்ளதாக கேகாலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது. இந்த வீதியை பயன்படுத்துவோர் மாற்று வழிகளை பயன்படுத்துமாறும் அனர்த்த முகாமைத்துவ பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது.
அனர்த்தம் ஏற்பட்ட போது வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் அவசர தேவைக்காக வெளியில் சென்றிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. உரிமையாளரின் தாயார் காயங்களுடன் சிகிச்சைக்காக மாவனெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும், வர்த்தக நிலையத்தின் உரிமையாளரும் அவரது இரண்டு பிள்ளைகளும் உயிர் தப்பித்துள்ளனர்.