இலங்கையில் சிறையில் உள்ள தமிழக கடற்றொழிலாளர்கள் ; முதலமைச்சர் விஜய் மத்திய ஜெய்சங்கருக்கு கடிதம்
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழகக் கடற்றொழிலாளர்களை உடனடியாக மீட்க வலியுறுத்தி முதலமைச்சர் ஜோசப் விஜய் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக இந்திய ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
குறித்த கடிதத்தில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

“இராமநாதபுரத்தைச் சேர்ந்த ஆறு கடற்றொழிலாளர்கள், இன்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த பத்தாம் திகதி கடலுக்குத் தொழிலுக்குச் சென்ற குறித்த ஆறு கடற்றொழிலாளர்களும் சர்வதேச கடல் எல்லையை மீறி கடற்றொழிலில் ஈடுபட்டதாகக் குறிப்பிட்டு இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 54 தமிழகக் கடற்றொழிலாளர்கள் இலங்கை சிறையில் வாடும் நிலையில் தற்போது இந்த ஆறு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், 264 படகுகளும் அந்நாட்டு கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ளன.
எனவே, குறித்த ஆறு கடற்றொழிலாளர்களையும் முன்னதாகக் கைது செய்யப்பட்டுள்ள 54 கடற்றொழிலாளர்களையும் மீட்க உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.
மேலும் இவ்விடயம் தொடர்பாக இலங்கை அதிகாரிகளைத் தொடர்புகொண்டு கடற்றொழிலாளர்களையும் படகுகளையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழக முதலமைச்சர் விஜய், ஜெய்சங்கரிடம் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.