முல்லைத்தீவு வைத்தியசாலையில் ஏற்படவுள்ள மாற்றம் ; ஆரம்பிக்கப்பட்ட நடவடிக்கைகள்
முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் 600 மில்லியன் இலங்கை ரூபா இந்திய அரசாங்கத்தின் மானிய உதவியுடன் நான்கு மாடி மருத்துவ விடுதி வளாகத்தை நிர்மாணிப்பது தொடர்பாக அண்மையில் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இலங்கை செய்திகள் இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி.இராதாகிருஷ்ணன் இலங்கைக்கு மேற்கொண்ட விஜயத்தை முன்னிட்டு, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் பதில் செயலாளர் டபிள்யூ.கே. விக்ரமசிங்க ஆகியோரால் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு பரிமாறிக்கொள்ளப்பட்டது.

நவீன வசதிகள்
இந்தத் திட்டம் முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் நவீன வசதிகள் மற்றும் அத்தியாவசிய உள்கட்டமைப்புகளுடன் கூடிய நான்கு மாடி மருத்துவ வார்டு வளாகத்தின் சிவில் கட்டுமானத்தை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இதில் மின் தூக்கி, காற்று குளிரூட்டல் வசதிகள், மின் இயந்திர மற்றும் யு.பி.எஸ். முறைமை, தீயணைப்பு பாதுகாப்பு மற்றும் குழாய் மூலமான மருத்துவ எரிவாயு விநியோக முறைமை உள்ளிட்ட உள்கட்டமைப்புகளை நிறுவுதல் ஆகியவை உள்ளடங்கும் என கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.
முன்மொழியப்பட்டுள்ள இந்த மருத்துவ விடுதி வளாகம், 35 வயதுக்கு மேற்பட்டோருக்கான பரிசோதனை வீதத்தை கணிசமாக அதிகரிப்பதன் மூலம் தொற்றா நோய்களினால் ஏற்படும் முன்கூட்டிய மரணங்களைத் தடுப்பதையும், பிற வைத்தியசாலைகளுக்கான நோயாளர் பரிந்துரைகளை பெருமளவில் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இத்திட்டம் நிறைவடையும் போது, வைத்தியசாலையின் படுக்கை பயன்பாட்டு வீதம் 150 சதவீதத்துக்கும் அதிகமாக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளதுடன், இது மாவட்டத்தில் சுகாதார சேவைகளை கணிசமாக மேம்படுத்தும்.
நாட்டின் 25 மாவட்டங்களில் தற்போது 18 மக்கள் நலன்சார் மானியத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வரும் இருதரப்பு 'உயர் தாக்க சமூக மேம்பாட்டுத் திட்ட' கட்டமைப்பின் கீழ் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இந்த முயற்சிகள் வீட்டுவசதி, சுகாதாரம், கல்வி, மீன்பிடி, போக்குவரத்து, புதுப்பிக்கத்தக்க வலுசக்தி, வாழ்வாதாரப் பராமரிப்பு, விவசாயம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மக்களின் அன்றாட வாழ்வில் ஒரு உறுதியான மாற்றத்தை ஏற்படுத்தி வருவதாக இந்திய உயர்ஸ்தானிகரகம் மேலும் தெரிவித்துள்ளது.