பிரித்தானியாவில் மூளைக்காய்ச்சலால் உயிரிழந்த தமிழ் குடும்பஸ்தர்
பிரித்தானியாவில் மூளைக்காய்ச்சல் (Meningitis) நோயை வைத்தியர்கள் ஆரம்பத்திலேயே சரியாக அடையாளம் காணத் தவறியதாகக் கூறப்படும் நிலையில், இரண்டு பிள்ளைகளின் தந்தையான தமிழ் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பரன் நித்தியானந்தன் என்ற 39 வயதுடைய பல் மருத்துவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அவரது உடல்நலக் குறைபாடு ஆரம்பத்தில் சாதாரண காது தொற்றான 'நீச்சல் வீரரின் காது' (Swimmer's Ear) எனக் கருதப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பரனுக்கு ஆரம்பத்தில் காய்ச்சல், மூக்கு ஒழுகுதல் மற்றும் இருமல் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டுள்ளன. பின்னர் அவை காது வலியாக மாறியுள்ளன.

இதனையடுத்து, இரண்டு நாட்களுக்குப் பின்னர் அவசர சிகிச்சை மையத்திற்குச் சென்ற அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், 'ஓடிடிஸ் எக்ஸ்டெர்னா' (Otitis Externa) எனப்படும் வெளிக்காது தொற்று ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்து, நுண்ணுயிர் எதிர்ப்பு காது சொட்டு மருந்துகளைப் பரிந்துரைத்துள்ளனர்.
எனினும், வீட்டிற்குத் திரும்பிய பின்னரும் அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்துள்ளது. இதனால் அவரது மனைவி கிளேர், NHS 111 அவசர மருத்துவ ஆலோசனைச் சேவையைத் தொடர்புகொண்டுள்ளார்.
இதன்போது இரண்டு நாட்களில் இரண்டு தடவைகள் ஆம்புலன்ஸ் குழுவினர் அவரது வீட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
அவற்றில் ஒரு சந்தர்ப்பத்தில் பரனின் உடல் வெப்பநிலை 40.2 பாகை செல்சியஸாகப் பதிவாகியுள்ளது. இருப்பினும், அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படாமல் வீட்டிலேயே இருந்துள்ளார்.
அடுத்த நாள், கடுமையான தலைவலி, ஒளியைப் பார்க்க முடியாமை, கழுத்து வலி, வாந்தி மற்றும் உணவு உட்கொள்வதில் சிரமம் உள்ளிட்ட பாதிப்புகள் அவருக்கு ஏற்பட்டுள்ளன.
இதனையடுத்து, இரண்டாவது முறையாக வருகை தந்த ஆம்புலன்ஸ் குழுவினர் அவரைப் பரிசோதித்து, பொது மருத்துவர் ஒருவரைத் தொடர்புகொண்டுள்ளனர்.
காது தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அவருக்கு வாய்வழி நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. எனினும், அவர் மீண்டும் வீட்டிலேயே இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

அன்று மாலை பரனின் உடல்நிலை மேலும் மோசமடைந்ததைத் தொடர்ந்து, அவரது மனைவி கிளேர் அவசர இலக்கமான 999ஐத் தொடர்புகொண்டுள்ளார்.
மூன்றாவது ஆம்புலன்ஸ் குழுவினர் அங்கு சென்றடைந்தபோது, பரனால் பேசக்கூட முடியாத நிலை ஏற்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து, அவர் அவசரமாக வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு அவருக்கு மூளைக்காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்ட போதிலும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நான்கு நாட்களுக்குப் பின்னர் அவர் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், தனது கணவரின் இழப்பு குறித்து கருத்துத் தெரிவித்த 39 வயதான கிளேர், "நான் எனது ஆத்ம துணையையும், என்னுடன் இறுதிவரை வாழத் திட்டமிட்டிருந்த நபரையும் இழந்துவிட்டேன்" எனத் தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.
மேலும், தனது கணவரின் மரணம் தொடர்பான விசாரணை மிகவும் கடினமானதாக இருக்கும் என்பதைத் தாங்கள் அறிந்துள்ளதாகவும், பரனுக்கு உண்மையில் என்ன நடந்தது என்பதைப் புரிந்துகொண்டு, தாங்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கும் பதில்களைப் பெற்றுக்கொள்ள விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் பரனின் குடும்பத்தினர் அவரது மரணத்திற்கான காரணங்கள் மற்றும் மருத்துவச் சிகிச்சையின்போது இடம்பெற்ற சம்பவங்கள் குறித்த தெளிவான விளக்கங்களை எதிர்பார்த்துள்ளனர்.